Published : 03 Apr 2020 07:08 AM
Last Updated : 03 Apr 2020 07:08 AM
கரோனா வைரஸ் விவகாரத்தில் மற்ற நாடுகளைப் போல சீனா மீது பழிபோடாமல் மிகுந்த சாமர்த்தியத்துடன் இந்தியா நடந்துகொண்டது என்று பாராட்டு கிடைத்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹானை மையமாகக் கொண்டு கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கரோனா விவகாரத்தை சீனா வேண்டுமென்றே மறைத்தது என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சீனா மீது பகிரங்கமாக பழி சுமத்தின. சீனா குறித்து அவதூறாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் கட்டுரைகளை எழுதின.
ஆனால் இந்த விவகாரத்தில் சீனா மீது இந்தியா நேரடியாக பழிபோடாமல் சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக பாராட்டுகள் எழுந்துள்ளன.
மத்திய சீன பகுதியில் வூஹான் நகரம் அமைந்துள்ளது. வூஹான் நகரம் குறித்து இந்தியாவில் சிலர் மட்டுமே நன்கு அறிந்துள்ளனர். வூஹான் நகரில் சீனாவின் முக்கிய தொழிற்சாலைகள், தொழில்நுட்ப மையங்கள், கல்வி மேம்பாட்டு நிறுவனங்கள் ஆகியவை அமைந்துள்ளன. சீனாவின் ஒட்டுமொத்த தொழில்நுட்பமும், தொழிற்சாலைகளும் வூஹானை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக இங்கு ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்து சீனாவின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தபோதுதான் வூஹான் நகரம்குறித்து இந்தியர்களுக்கு தெரியவந்தது. அதற்கு முன்பு இந்தியாவில் சிலருக்கு மட்டுமே வூஹான் நகரம் குறித்த முழுமையான செயல்பாடுகள் தெரிந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய நீர் மின்சார நிலையம் வூஹான் நகருக்கு மிக அருகே அமைந்துள்ளது. சீனாவின் சமகால தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக வூஹான் உள்ளது. இங்கு 350 ஆராய்ச்சி மையங்கள், 1,600 உயர் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. பார்ச்சூன் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் வூஹானிலும் அமைந்துள்ளன. உயர்தொழில்நுட்பம், மிகச்சிறந்த கல்வி நிறுவனங்கள், உயர்மருத்துவக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் நிறைந்தது வூஹான்.
கரோனா வைரஸ் பரவியபோது சீனா செய்த தவறை இந்தியா செய்யவில்லை. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆனால் வூஹான் நகரை கடுமையாக விமர்சித்த மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் சீனாவின் புகழுக்கு பங்கம் விளைவித்தன.
சீனாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேலும் வூஹானிலுள்ள வூஹான் பல்கலைக்கழகம், ஹுவாஸாங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா பிரச்சினையால் வூஹானில் தங்கியிருந்த 324 மாணவர்களை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா அழைத்து வந்தது. வூஹானில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மிகக் குறைந்த அளவில் கல்விக்கட்டணம் உள்ளதால் இந்தியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தவர் அதிகம் பயில்கின்றனர். இங்கு பயில்வதற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை (கல்விக்கட்டணம், உணவு, தங்குமிடம் உள்பட) செலவாகும். ஆனால் இதுவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இதுபோல 7 முதல் 8 மடங்கு வரை கூடுதலாக செலவாகும். இதனால்தான் மாணவர்கள் வூஹானை நாடுகின்றனர்.
தற்போது கரோனா பிரச்சினையால் வூஹானில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் சீனா இந்த சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா விவகாரத்தில் சீனாவின் பிரச்சினைகளை இந்தியா மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை போல நேரடியாக சீனாவை விமர்சிக்காமல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்தியாதீவிரப்படுத்தியது. சீனா மீது வெறுப்பு காட்டாமல் பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி இறங்கினார். இந்த விவகாரத்தில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருந்து பிரச்சினையை சமாளிக்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சார்க் நாடுகள் உச்சி மாநாட்டிலும், ஜி20 மாநாட்டிலும் இந்தியா இப்பிரச்சினையை லாவகமாக கையாண்டது. பிரச்சினை எழுந்த சீனாவைப் பற்றி குற்றச்சாட்டு சொல்லாமல், அதிலிருந்து மீண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர் என்று பாராட்டுகள் தற்போது வந்துள்ளன. இந்த பாராட்டுகளை அரசியல், பொருளாதார விமர்சகர்களும், தூதரக அலுவலர்களும் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT