Last Updated : 02 Apr, 2020 03:58 PM

 

Published : 02 Apr 2020 03:58 PM
Last Updated : 02 Apr 2020 03:58 PM

பொருளாதாரப் பேரழிவை எதிர்கொள்ள இந்தியா தயாராவது அவசியம்: ராகுல் காந்தி எச்சரிக்கை

ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

முன்னேற்பாடில்லாத லாக்-டவுனில் ஏழைகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் போதுமான வசதிகளை மத்திய அரசு செய்து தரவில்லை. அடுத்துவரும் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், காங்கிரஸ் சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்துப் பேசுவதறக்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலி மூலம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் காணொலி மூலம் இணைந்தனர்.

நீண்ட காலத்துக்குப்பின் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றதும், கருத்துகள் தெரிவித்ததும் பல தலைவர்களுக்கு நிம்மதியளித்தது. கரோனா வைரஸ் மிகப்பெரிய பேரழிவைத் தரப்போகிறது என்று கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதன்முதலாக எச்சரிக்கை விடுத்தவர் ராகுல் காந்தி. அப்போது கரோனா வைரஸ் குறித்து யாரும் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இன்று கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளும், மத்திய அரசும் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அடுத்து வரும் காலங்களில் இந்தியா மிகப் பெரிய பொருளாதாரப் பேரழிவைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என எச்சரித்துள்ளார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

''கரோனா வைரஸ் குறிப்பாக முதியோர்களையும், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளவர்களை அதிகமாகப் பாதிக்கிறது. இந்தத் தரப்பு மக்களுக்கு அதிகமான கவனம் கொடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்த வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கரோனா வைரஸைப் பார்த்து வருகிறோம். பல்வேறு வல்லுநர்களிடம் பேசி வருகிறோம். ஆனால், இதுபோல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகமாக வைத்திருக்கும் எந்த நாடும் எந்தவிதமான முன்னேற்பாடும் அதாவது தங்குமிடம், உணவு, இல்லாமல் ஊரடங்கை முயற்சிக்காது.

மத்திய அரசு முன்னேற்பாடில்லாமல் செய்தது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. லாக்-டவுனைச் செயல்படுத்தும் முன், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளை மத்திய அரசு செய்திருக்க வேண்டும்.

அடுத்துவரும் காலங்களில் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை எதிர்கொள்ள தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஏழைகளுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். மத்திய அரசு செய்யும் செயல்களை காங்கிரஸ் கண்காணிக்க மட்டுமே செய்யும். தேசத்தில் உள்ள ஏழைகள், தொழிலாளர்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக முதியோருக்கு அதிகமான கவனம் செலுத்த வேண்டும்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x