Last Updated : 02 Apr, 2020 12:19 PM

2  

Published : 02 Apr 2020 12:19 PM
Last Updated : 02 Apr 2020 12:19 PM

இப்படிச் செய்வார்களா மற்ற எம்.பிக்கள்? பிரதமர் கேர்ஸ் நிதிக்கு பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் புதிய அறிவிப்பு

கவுதம் கம்பீர் : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எதிராக தேசம் நடத்திவரும் போராட்டத்தில் எம்.பி.க்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், நிறுவனங்கள், தனி நபர்கள் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு உதவி செய்து வரும் நிலையில் பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது, உயரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன.

இந்தத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி தேவை என்பதால், பிரதமர் கேர்ஸ் நிதி (PM—CARES Fund) உருவாக்கப்பட்டு அதில் நிதியளிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று திரை நட்சத்திரங்கள், நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தனி நபர்கள், எம்.பி.க்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இதில் பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏற்கெனவே ரூ.1 கோடி அறிவித்தார். இ்ப்போது மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த 2 ஆண்டுகளுக்கு தனது ஊதியம் முழுவதையும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்குவதாக கம்பீர் இன்று அறிவித்துள்ளார்.

கவுதம் கம்பீர் ட்விட்டரில் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், “இந்த நாடு தங்களுக்காக என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார்கள். ஆனால், உண்மையான கேள்வி என்னவென்றால், இந்த தேசத்துக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள், என்ன முடியும் என்பதுதான். நான் என்னுடைய 2 ஆண்டு ஊதியம் முழுவதையும் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்போகிறேன். நீங்களும் நிதியுதவி அளிக்க முன் வாருங்கள்” என அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கெனவே கவுதம் கம்பீர் நடத்திவரும் அறக்கட்டளை மூலம் டெல்லியில் தனது தொகுதியில் சாலை ஓரம் வசித்துவரும் மக்களுக்கும், வீடில்லாத மக்களுக்கு நாள்தோறும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார். நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x