Published : 01 Apr 2020 01:32 PM
Last Updated : 01 Apr 2020 01:32 PM
ஆந்திராவில் வீடுதோறும் புழங்கி வரும் பெயரான ஆந்திரா பேங்க் என்ற ஆந்திர வங்கி ஏப்ரல் 1ம் தேதி முதல் இல்லை, அது மத்திய அரசின் வங்கிகள் இணைப்புத் திட்டத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
தொடர்ந்து சிறிது காலத்துக்கு அந்தப் பெயரிலேயே வங்கி இருந்தாலும் டெக்னிக்கலாக அது யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டது.
இனி ஆந்திர வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியாதான். வரலாற்றில் இது மறைந்து விடும் என்பது உறுதியானாலும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து வந்த ஆந்திரா பேங்கின் நினைவுகள் மக்களிடமிருந்து எளிதில் அகலாதவை. தெலுங்கு மாநிலங்களில் அவர்கள் மாநிலத்திலேயே உருவான 2வது வங்கியை அவர்கள் இழக்கின்றனர். முதலில் ஏப்ரல், 2017-ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் இந்திய ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
ஆந்திரா பேங்க் சுதந்திரப் போராட்ட வீரர் போகராஜு பட்டாபி சீதராமையா என்பவரால் உருவாக்கப்பட்டது. வர்த்தகங்களை, வங்கி நடவடிக்கைகளை 1923ம் ஆண்டு நவம்பர் 28 அன்று தொடங்கியது. பெய்ட் அப் கேப்பிடல் அப்போது ரூ.1 லட்சம். அதிகாரப்பூர்வ மூலதனம் ரூ.10 லட்சம். இந்தியா முழுதும் 2,900 கிளைகள் சுமார் 3,800 ஏடிஎம்கள் இருக்கின்றன. இப்போது யூனியன் பேங்க் இந்தியாவுடன் மெர்ஜ் ஆனதையடுத்து சேர்ந்து 9,500 கிளைகள், 12,000 ஏடிஎம்கள் உள்ளன.
இப்போதைக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க் ஆகிய 3 வங்கிகளின் கிளைகளும் இயங்கும். ஏடிஎம்களும் இப்போதைக்கு மூடப்பட மாட்டாது, ஏற்கெனவே உள்ள வங்கிக் கணக்குகள், ஐ.எஃப்.சி. கோட், எம்.ஐ.சி.ஆர். கோட், டெபிட் கார்ட் எண், ஆகியவை இணைப்புகளுக்குப் பின்பும் செயலில் இருக்கும். ஏற்கெனவே உள்ள செக் புத்தகம், பாஸ் புத்தகம் அப்படியே தொடரும். இதில் மாற்றங்கள் இருந்தால் தெரிவிக்கப்படும். இப்போதைக்கு பேலன்ஸ் சீட் மெர்ஜர்தான்.
இணைப்புக்குப் பிறகு கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி வாடிக்கையாளர்கள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏடிஎம்களை எந்த வித கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT