Published : 01 Apr 2020 08:55 AM
Last Updated : 01 Apr 2020 08:55 AM
காசநோய் மருந்து கரோனாவை குணப்படுத்துமா என சர்வதேச விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதையும் கரோனாவைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதிய நம்பிக்கை கீற்றாக காசநோய் தடுப்பு மருந்து மூலம் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த முடியுமா என்பது குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக நியூயார்க் தொழில்நுட்ப கழக (என்.ஒய்.ஐ.டி)விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "ஜப்பான்,பிரேசில் உள்ளிட்ட நாடுகளில்சிறுவயது முதலே குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பு (பிசிஜி) மருந்து வழங்கப்படுகிறது.
அந்த நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது. பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் இல்லாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கரோனாவைரஸ் பரவுவது 4 மடங்கு அதிகமாக உள்ளது.
எனவே காசதோய் தடுப்புமருந்து கரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துமா என்பது குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமன்றி ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் காசநோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகளில் கரரோனா வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுமார்4,000 மருத்துவர்கள், செவிலியர்கள் ஆராய்ச்சி திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கரோனா வைரஸை ஒழித்து கட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காசநோய் தடுப்பூசியின் சிறப்பு
எந்தவொரு தடுப்பூசியிலும் ஒரு நோய்க் கிருமியின் சிறு பாகத்தை மனித உடலில் செலுத்துவார்கள். அப்போது மனித உடல் அந்த நோய்க் கிருமிக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கும். உண்மையாகவே நோய்க்கிருமி உடலில் நுழையும்போது ஏற்கெனவே தயாராக இருக்கும் ஆன்டிபாடிகள், நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
காசநோய் தடுப்பூசி சற்று வித்தியாசமானது. இந்த தடுப்பூசியின் மூலம் உடலின் ஒட்டுமொத்த நோய்எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படும். இதன்மூலம் எந்த வைரஸ் உடலில் நுழைந்தாலும் ஆன்டிபாடிகள் அவற்றை எதிர்த்து போராடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT