Published : 31 Mar 2020 11:16 AM
Last Updated : 31 Mar 2020 11:16 AM
கரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு, வீடடங்கு உத்தரவால் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து, அரசு ஊழியர்கள், எம்எல்ஏக்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ய தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் உயர் அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது 21 நாட்கள் லாக்-டவுனால் மாநில அரசுக்கு ஏராளமான வரிவருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதார்கள், முதல்வர், எம்எல்ஏ, எம்எல்சிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது
இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில், “முதல்வர், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், பல்வேறு துறைகள், வாரியங்களின் தலைவர்கள், பொதுத்துறை பிரதிநிதிகள் ஆகியோருக்கு ஊதியம் 75 சதவீதம் குறைக்கப்படுகிறது
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஏஐஎஸ் அதிகாரிகளுக்கு ஊதியத்திலிருந்து 60 சதவீதமும், மாநில அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமும் குறைக்கப்படுகிறது.
அரசு ஊழியர்களில் 4-வது நிலை ஊழியர்களுக்கும், வெளிப்பணி ஒப்படைப்பு, ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கு 10 சதவீத ஊதியம் குறைக்கப்படுகிறது. 4-வது நிலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியம் 10 சதவீதமும், மற்ற அரசு ஊழியர்கள், நகராட்சி, பொதுத்துறை ஊழியர்களின் ஓய்வூதியம் 50 சதவீதமும் குறைக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
லாக்-டவுன் நடக்கும் 21 நாட்களும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தெலங்கானா அரசு திடீரென முடிவெடுத்து அறிவித்துள்ளது அந்த மாநில அரசு ஊழியர்களுக்கு பெரும அதிர்ச்சியாக அமைந்துள்ளது. தெலங்கானா அரசின் முடிவை மாநில பாஜக கடுமையாகக் கண்டித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT