Last Updated : 31 Mar, 2020 09:33 AM

 

Published : 31 Mar 2020 09:33 AM
Last Updated : 31 Mar 2020 09:33 AM

டெல்லி நிஜாமுதீனில் மதவழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 153 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: டெல்லியில் கரோனா பாதிப்பு 97 ஆக அதிகரிப்பு

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களை அரசுப்பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லியின் தெற்குப்பகுதியில் உள்ள நிஜாமுதீனில் இந்த மாதத் தொடக்கத்தில் மதவழிபாட்டுக் கூட்டத்தி்ல் பங்கேற்றவர்களில் 153 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதால் அவர்களை மருத்துவ அதிகாரிகள் மருத்துமனைக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தியுள்ளனர்

டெல்லியில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 25 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து 97 ஆக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது, புதிதாக 25 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 89 பேர் எல்என்ஜேபி மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, ஆர்எம்எல் மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, ராஜீவ்காந்தி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி

தெற்கு டெல்லி நிஜாமுதீனில் இந்த மாதத் தொடக்கத்தில் மதவழிபாட்டுக்கூட்டம் ஒன்றில் ஏராளாமான மக்கள் பங்கேற்றுள்ளார்கள். அவர்களில் பலருக்கும் கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 85 பேர் எல்என்ஜேபி மருத்துவமனைக்கும், 68 பேர் பிற மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது

போலீஸார் தரப்பில் கூறுகையில், “ இந்த மாதம் 1ம் தேதிமுதல் 15-ம் தேதி வரை டெல்லி நிஜாமுதீன் மேற்குப்பகுதியில் தப்லிக் இ ஜமாத் சார்பில் வழிபாட்டுக்கூட்டம் நடந்தது. இதில் இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், உள்நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தெற்கு டெல்லி நிஜாமுதீன் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது

200 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களைக் கண்டுபிடித்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்
ெடல்லி சுகாதாரத்துறை சார்பில் கூறுகையில், “ கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் இருந்து கடந்த 29-ம் தேதி வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 567 பேர் டெல்லி விமானநிலையத்தில் வந்திறங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் கண்காணிப்பில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டோர் மருத்துமனைக்கு செல்லும் காட்சி

இதில் 19,782 பயணிகள் விமானநிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டனர், இதில் 18,573 பயணிகளை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர், 1,197 பயணிகள் மருத்துவமனையில் கண்கணிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 21 ஆயிரத்து 628 பேர் இப்போது வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், 1,639 பேர் 14 நாட்கள் தனிமையை முடித்துள்ளனர். இவ்வாறு டெல்லி சுகாதாரத்துறை தெரவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x