Published : 12 Aug 2015 06:55 PM
Last Updated : 12 Aug 2015 06:55 PM
உபியின் ஆக்ராவில் ’வைல்ட் லைப் எஸ்.ஓ.எஸ்’ மற்றும் உபி மாநில வனத்துறை இணைந்து ஒரே நாளில் 33 அரிய வகை பாம்புகளை மீட்டுள்ளன. இவை ஸ்ரவண மாதத்தில் நடைபெறும் சிவன் கோயில் திருவிழாக்களில் பக்தர்களுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த பாம்பாட்டிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆக்ராவின் பல்வேறு பகுதியில் உள்ள மூன்று சிவன் கோயில்களில் ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு வேடிக்கை காட்டி பணம் பார்த்தபடி சில போலி பாம்பாட்டிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களிடம் 27 நல்லபாம்புகள், 4 சாரை பாம்பு, ஒரு இருதலை மணியன் மற்றும் மலைப்பாம்பு என 33 அரிய வகை பாம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் கிடைத்ததும் அங்கு உபி மாநில வனத்துறை அதிகாரிகளுடன் விரைந்த வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் அமைப்பினரை கண்டு அந்த ‘பாம்பாட்டிகள்’ பாம்புகளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ் அமைப்பின் வனவிலங்கு மருத்துவரான டி.இளையராஜா கூறுகையில், ‘இவை, ஆக்ராவின் சுற்றுப் பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்ட பாம்புகள் ஆகும். இதில், அடிக்கடி கொத்தும் குணத்தை கொண்ட சாரைப் பாம்பின் வாய் மிகச்சிறிய ஊசியால் தைக்கப்பட்டிருந்தது.
இதை பிரித்து சிகிச்சை அளித்து வருகிறோம். இவர்களிடம் இருந்த இருதலை மணியன் பாம்பு வீட்டில் இருந்தால் மிகவும் அதிர்ஷ்டம் என வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் மருத்துவ சிகிச்சைக்கு பின் அருகில் உள்ள காடுகளில் விடப்படும்.’ எனக் கூறினார்.
இது குறித்து ‘வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ்’-ன் துணை நிறுவனரான கீதா சேஷமணி கூறுகையில், ‘பாம்புகளை பிடிப்பதும், அவற்றை வைத்து வேடிக்கை காட்டுவதும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி குற்றமாகும். இதனால், பாம்புகளை வைத்து பிழைத்து வந்த பாம்பாட்டிகள் மறுவாழ்வு தேடி சென்று விட்டனர்.
தற்போது பாம்பாட்டிகள் என்ற பெயரில் பல போலியானவர்கள் வனவிலங்கு கடத்தலிலும் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது.’ எனத் தெரிவித்தார்.
தெற்காசியாவிலேயே வனவிலங்கு காக்கும் பொதுநல அமைப்பான வைல்டு லைப் எஸ்.ஓ.எஸ், நாடு முழுவதும் வனவிலங்களை மீட்பதுடன் அவற்றை காக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இத்துடன் டெல்லி மற்றும் ஆக்ராவின் பகுதியில் கடத்தப்படும் வனவிலங்குகளை தடுக்க 24 மணி நேரம் செயல்படும் ஒரு ‘ஹாட்லைன்’ போன் வசதியும் அமைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT