Last Updated : 30 Mar, 2020 04:06 PM

 

Published : 30 Mar 2020 04:06 PM
Last Updated : 30 Mar 2020 04:06 PM

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குடும்பத்தினர் மீது  இரக்கமில்லாமல் கிருமிநாசினி ரசாயன மருந்து பீய்ச்சி அடிப்பு: உத்தரப் பிரதேச அதிகாரிகள் அலட்சியம்

தொழிலாளர்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்ட காட்சி : படம் உதவி | ட்விட்டர்.

பரேலி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உத்தரப் பிரதேசம் வந்தபோது, அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தினர், குழந்தைகள் மீதும் இரக்கமின்றி கிருமிநாசினி ரசாயன மருந்து பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களி்ல் வெளியாகி வைரலாகி வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தடுக்க எடுக்க நடவடிக்கை என்ன என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தொழிலாளர்கள் மீது மனிதநேயமின்றி மருந்து அடிக்கப்பட்டுள்ளது.

21 நாட்கள் லாக்-டவுனால் டெல்லி, நொய்டா போன்ற நகரங்களில் தொழிற்சாலைகள், குறு, சிறு தொழில்கள் மூடப்பட்டன. இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்தே வருகின்றனர். பேருந்து வசதியும் இல்லாததால் வேறு வழியின்றி குடும்பத்துடன் நூற்றுக்கணக்கான கி.மீ. நடந்தே வருகின்றனர்.

இவ்வாறு நொய்டா, டெல்லி பகுதியில் பணியாற்றிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்ள், குடும்பத்தினர் பரேலி நகருக்கு வந்தனர். ஆனால், அவர்களை ஊருக்குள் விடாமல் தடுத்த அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அமரவைத்து அவர்கள் மீது கிருமி நாசினி மருந்தை பீய்ச்சி அடித்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு அதிகாரி பேசுகையில், “உங்கள் கண்களையும், குழந்தைகளின் கண்களையும் மூடிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மருந்து அடிக்கும் காட்சி இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் இருந்த தொழிலாளரான முகமது அப்சல் கூறுகையில், “நாங்கள் 50 பேர் சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அங்கு வந்த அதிகாரிகள் எங்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதாகக் கூறி மருந்து அடித்தார்கள். மருந்துக்கு கண்கள் எரிச்சல் அடைந்து குழந்தைகள் அழுதனர். பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்” எனத் தெரிவித்தார்

ஆனால், தண்ணீருடன் சோடியம் ஹைப்போகுளோரைட் மருந்து கலக்கப்பட்டு இந்தத் தொழிலாளர்கள் மீது அடிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பரேலி, லக்னோ அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து எந்த விதமான கருத்துக் கூறவும் மறுத்துவிட்டனர். இதுகுறித்து பரேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டபோது, அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி கூறுகையில், “ தொழிலாளர்கள் மீது தண்ணீரும், குளோரின் பவுடரும் கலந்துதான் அடிக்கப்பட்டது வேறு எந்த ரசாயனமும் சேர்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.

தொழிலாளரகள் மீது கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாா கூறுகையில், “தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி அடிக்க உத்தரவிட்டது யார், உத்தரப் பிரதேச அரசு எப்படி அனுமதி கொடுத்தது. தொழிலாளர்களை மனிதநேயமற்று நடத்தியது கண்டிக்கத்தக்கது. உரியவர்களைத் தண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x