Published : 30 Mar 2020 03:37 PM
Last Updated : 30 Mar 2020 03:37 PM

பழங்குடியினருக்கு அத்தியாவசியப் பொருட்களை சுமந்து சென்ற ஆட்சியர்!

திருவனந்தபுரம்

கேரளத்தில் மாவட்ட ஆட்சியரே பழங்குடிகளுக்கான அத்தியாவசியப் பொருள்களைச் சுமந்து சென்று கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் மளிகை, காய்கறிக் கடைகள் திறக்கப்பட்டாலும் குக்கிராமங்களில் இருப்போருக்கும், மலைப்பகுதிகளில் வசிக்கும் பட்டியல் இனக் குடியிருப்புவாசிகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது சவாலாகவே இருக்கிறது.

இப்படியான சூழலில், கேரளத்தில் மாவட்ட ஆட்சியரே பழங்குடிகளுக்கான அத்தியாவசியப் பொருள்களைச் சுமந்து சென்றுள்ளார்.

கரோனா நோய்த் தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளமும் ஒன்று. இங்கு 80,000-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்திலும் கரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. ஊரடங்கின் காரணமாக அங்குள்ள கோந்நி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பழங்குடி மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் கடும் சிரமம் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் வந்தது.

இதுகுறித்து தகவல் வந்ததும் பத்தனம்திட்டா ஆட்சியர் நூஹ், கோந்நி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோர் களத்தில் இறங்கினர். அங்குள்ள ஆவணிப்பாறா என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் காலனிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் அங்கிருந்து சிறிது தூரம் மலையேற்றம், அதன் பின்னர் வடிந்தோடும் காட்டாற்று தண்ணீர், மீண்டும் மலையேற்றம் ஆகியவற்றைக் கடந்துதான் அந்த மலை கிராமத்துக்குச் செல்ல முடியும்.

இதைப் புரிந்துகொண்டு பழங்குடி மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை ஆட்சியர் நூஹ், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோர் தாங்களே தோளில் சுமந்து சென்று கொடுத்தனர். கூடவே, அங்கிருக்கும் பழங்குடி மக்களுக்கு கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஊட்டித் திரும்பினார் ஆட்சியர்.

பத்தனம்திட்டா ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெனிஷ் ஆகியோரின் இந்த கரோனா சேவை பழங்குடிமக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x