

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சுமார் 400 தமிழர்கள் சிக்கி உள்ளனர். அவர்களில் 110 பேருக்கு கேதார்காட் எனும் கங்கை கரையில் உள்ள தமிழகத்தின் குமாரசாமி மடம் உதவி வருகிறது.
பல நூற்றாண்டுகள் பழைமையான இந்த மடத்தில் சென்னை 14, திருச்சி 56, மதுரை 13, திருப்பூர் 15, ஒசூர் 9 மற்றும் தென்னிந்தியர்கள் என 110 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் 3 வேளையும் தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் குமாரசாமி மடத்தின் முக்கிய நிர்வாகி ராஜ்குமார் ராஜா கூறும்போது, ‘ஊரடங்கால் வாரணாசியில் சிக்கித் தவித்த 110 தென்னிந்திய மக்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளோம். கடந்த 22-ம் தேதி முதல் அவர்கள் இங்கு தங்கியுள்ளனர். வாரணாசியின் வேறு பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்கள், ஏழை தொழிலாளர்கள், பிச்சை எடுத்துப்பிழைப்பவர்கள் மற்றும் போலீஸார்என சுமார் 400 பேருக்கு இரண்டு வேளை உணவு அளிக்கிறோம்’ எனத் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் வாரணாசியில் சிக்கித் தவிக்கும் செய்தி ’இந்து தமிழ் திசை’ இணையத்தில் வெளியானது. இந்த செய்தி மூலம், தகவல் அறிந்த வாரணாசி உதவி ஆட்சியர் ஏ.மணிகண்டன், தமிழர்களை நேரில் சந்தித்து உதவி செய்து வருகிறார்.
சோனார்காட் பகுதியில் மதுரையை சேர்ந்த 32 பேர் உட்பட கங்கையின் படித் துறைகளில் சுமார் 200 தமிழர்கள் சிக்கியுள்ளனர். அனைவருக்கும் உணவு மற்றும் இருப்பிட வசதியை தமிழரான மணிகண்டன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் அவர் கூறும்போது, ‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள்தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 வேளையும் உணவுவழங்கப்படுகிறது. நோய்களால்பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகிறோம். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆட்சியர் அருண் ஆகியோர் உ.பி.யில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மக்கள் குறித்து என்னிடம் செல்போனில் விசாரித்தனர். அவர்களை பத்திரமாகப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொண்டனர்' எனத் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் கனிம சுரங்கங்கள் அதிகம் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 15 லாரி ஓட்டுநர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியரும் தமிழருமான எஸ்.ராஜலிங்கம் உணவு, உறைவிடம் அளித்து உதவி வருகிறார்.