Published : 29 Mar 2020 02:34 PM
Last Updated : 29 Mar 2020 02:34 PM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடினமான முடிவுகளை நான் எடுத்ததற்கு இந்த தேசம் என்னை மன்னிக்க வேண்டும். இது மக்கள் உயிரோடு தொடர்புடையது. கரோனா வைரஸை ஒழிக்க லாக்-டவுனைத் தவிர வேறு வழியில்லை. நிச்சயம் கரோனா வைரஸை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் 'மன் கி பாத்' மற்றும் 40-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை 26 பேரின் உயிரைக் குடித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரத்தை நெருங்குகின்றனர். இந்நிலையில், 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் லாக்-டவுன் முடிவுக்கு மன்னிப்பு கோரியும், மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் பணியைப் பாராட்டியும் பிரதமர் மோடி பேசினார்.
மோடி பேசியதாவது:
''நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னை மன்னித்துவிடுவீர்கள் என நம்புகிறேன். என்னுடைய ஏழை சகோதரர்கள், சகோதரிகளைப் பார்க்கும்போது, எங்களை இப்படி சிக்கலில் வைத்துவிட்டாரே, என்ன மாதிரி பிரதமர் என்று சொல்வார்கள் என்பதை உறுதியாக உணர்கிறேன். அவர்களிடம் குறிப்பாக மன்னிப்பு கோருகிறேன்.
நீங்கள் பிரச்சினையில் இருந்து வருகிறீர்கள். உங்களின் பிரச்சினை எனக்குப் புரிகிறது. ஆனால், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நமது தேசத்தி்ல் கரோனா வைரஸை ஒழிக்க இதைத் தவிர வேறு வழியில்லை.
கரோனா வைரைஸ் ஒழிக்க லாக்-டவுன் மட்டுமே ஒரே வழி என்பதை உலகம் அறிந்து, அதைச் செயல்படுத்தி வருகிறது. உங்களின் பாதுகாப்பும் ,உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பும் லாக்-டவுன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏதாவது உங்களுக்கு அசவுகரியங்கள், கடினமான சூழல்கள் ஏதேனும் இருந்தால், நீங்கள் சந்தித்தால் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோருகிறேன்.
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கூறியுள்ளபடி எந்த நோயையும் தொடக்கத்திலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வளர்ந்து பெரிதாகும்போது அந்த நோயைக் குணப்படுத்துவது கடினமாகிவிடும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படும்போது விரும்பத்தாகத சம்பவங்கள் மோசமாக மற்றவர்களால் நடத்தப்படும் சம்பவங்களைக் கேட்பது துரதிர்ஷ்ட வசமானது. இதைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன்.
தற்போதுள்ள சூழலை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். நமக்கு சமூக விலகல் அவசியம், மனிதநேய விலகல், உணர்ச்சி விலகல் அல்ல. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கிரிமினல்கள் அல்ல.
தனிமையில் இருப்பவர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று இருக்கும் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மட்டுமே. இவர்கள் தனிமையில் இருப்பது தங்களையும், மற்றவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாக்காமல் இருப்பதற்குதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கரோனா வைரஸ் மனிதர்களைக் கொல்கிறது என்பதால் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இணைந்து அதை எதிர்த்து, ஒழிக்க வேண்டும்.
ஆதலால், லாக்-டவுன் என்பது உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பு. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கலாம். அடுத்து வரும் நாட்களில் நீங்கள் பொறுமையாக இருந்து லட்சமண ரேகையைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.
இந்த 21 நாட்கள் லாக்-டவுனை மதிக்காதவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன்.
ஆனால், யாரும் சட்டத்தை மீறி, வேண்டுமென்றே செல்வதில்லை. ஆனால், அவ்வாறு சிலர் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார்கள், அவர்கள் இந்த கரோனா குறித்தும், அதன் தீவிரம் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டும். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் லாக்-டவுன் விதிக்கு நீங்கள் கட்டுப்படாவிட்டால், இந்த மோசமான கரோனா வைரஸிடமிருந்து நம்மைக் காப்பது கடினம்.
உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் விதிமுறைகளை மதிக்காமல் வெளியே சென்று இப்போது வருத்தப்படுகிறார்கள், மற்றவர்கள் உயிரோடு விளையாடி வருகிறார்கள்.
மற்றவர்கள் எளிதாக வாழ்க்கை நடத்த உதவும் மக்கள் ஹீரோக்கள். குறிப்பாக பிளம்பர்கள், எலக்ட்ரீசியன், மளிகைக் கடை உரிமையாளர்கள், டெலிவரி செய்பவர்கள், தொலைத்தொடர்பு, இன்டர்நெட் பராமரிப்பாளர்கள் அனைவரும் ஹீரோக்கள்.
கரோனா வைரஸை எதிர்த்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா-மெடிக்கல் ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை வைத்துப் போரிடுகிறது.
இந்த தேசம் உங்களின் உடல்நலத்தில் அக்கறையாக இருக்கிறது. 20 லட்சம் பணியாளர்கள் மருத்துவப் பணியில் இருக்கிறீர்கள் என்பதை அறிவேன். உங்களுக்காக ரூ.50 லட்சம் காப்பீட்டை அறிவித்துள்ளது. இந்தப் போரில் நாட்டை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த 21 நாட்கள் ஓய்வு நாட்களை உங்களை முழுமையாக ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள். பழைய நண்பர்களுடன் அமர்ந்து பேசுங்கள்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT