Last Updated : 29 Mar, 2020 12:31 PM

 

Published : 29 Mar 2020 12:31 PM
Last Updated : 29 Mar 2020 12:31 PM

மிரட்டும் கரோனா: இந்தியாவில் உயிர் பலி 26 ஆக அதிகரிப்பு; பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது; மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தில் நிலை என்ன?

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அந்த வைரஸால் 26 பேர் பலியாகியுள்ளனர். 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகச் சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது. உலக அளவில் இதுவரை 61.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐரோப்பிய நாடுகள்தான் கரோனா வைரஸால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளன.

இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்த கரோனா வைரஸ் தீவிரம் காட்டி வந்தாலும், அதை எதிர்த்து மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தை பிரதமர் மோடி அமல்படுத்தினார்.

இருப்பினும் கரோனா வைரஸ் தாக்கத்துக்கு பாதிக்கப்பட்டோர், பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலில், “கரோனா வைரஸால் இந்தியாவில் 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 48 பேர் வெளிநாட்டவர்கள்.

டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 6 பேர் இறந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 6 பேர், குஜராத்தில் 6 பேர், கர்நாடகாவில் 3 பேர், மத்தியப் பிரதேசம், டெல்லியில் தலா இருவர், கேரளா, தெலங்கானா, தமிழகம், பிஹார், பஞ்சாப், மே. வங்கம், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 86 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாட்டிலேயே அதிகமாக 193 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். புதிதாக 12 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புனே மாவட்டத்திலிருந்து 5 பேர், மும்பையில் இருந்து 4 பேர், சாங்லி, ஜால்கான், நாக்பூரில் தலா ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 5 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 பேரில் உஜ்ஜெயின் நகரைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தூரைச் சேர்ந்த 21, 38, 40 மற்றும் 48 வயதுடைய ஆண்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்ட 5 பேரும் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குஜாரத் மாநிலத்தில் இன்று கரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்ததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x