Published : 29 Mar 2020 08:34 AM
Last Updated : 29 Mar 2020 08:34 AM
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமது (25) என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ''கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்குச் சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸைபரப்புவோம்'' என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த ஊழியரை உடனடியாக பணிநீக்கம் செய்து இன்போசிஸ் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக இன்போசிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “எங்களது ஊழியரின் அந்த பேஸ்புக் பதிவு, பொறுப்பான சமூக பகிர்வுக்கான உறுதிப்பாட்டுக்கும், நடத்தை நெறிமுறைகளுக்கும் எதிரானது. இன்போசிஸ் இத்தகைய செயல்களுக்கு சகிப்புத்தன்மையற்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அதன்படி, அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூர் காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறும்போது, “வைரஸை பரப்ப வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட இளைஞர் முஜீப் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். முஜீப், இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT