Published : 28 Mar 2020 05:24 PM
Last Updated : 28 Mar 2020 05:24 PM
கடுமையான கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடே சமூக இடைவெளியைப் பின்பற்றி வரும் வேளையில் கர்நாடகாவின் காய்கறிச் சந்தையொன்றில் கூட்டமாக வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சென்றனர். எந்தவித விழிப்புணர்வும் அச்சமும் இன்றி இப்படிக் குவிவதையும் பார்க்கும்போது மக்களுக்குப் பொறுப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தியாவில் 873 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வாரணாசி மக்களுடன் வீடியோ காணொலியில் உரையாடிய பிரதமர் மோடி, கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஒரே வழி சமூக இடைவெளி ஒன்றுதான் என்று தெரிவித்தார்.
மகாபாரதப் போர் 18 நாட்களில் வென்றது என்றும், கரோனா வைரஸுக்கு எதிரான போர் 21 நாட்கள் ஆகும் என்றும், அதை வெல்வதே லாக் டவுனின் நோக்கம் என்றும் பிரதமர் கூறினார். அதனை ஏற்று நாட்டின் பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை மிகுந்த விழிப்புணர்வோடு கையாண்டு வருகின்றனர். பல இடங்களில் காய்கறிச் சந்தைகள் எதிரே நீண்ட இடைவெளி விட்டு மக்கள் பொருட்கள் வாங்கக் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனால், இன்று காலை கர்நாடகாவைச் சேர்ந்த கடாக் மாவட்டத்தில் உள்ள விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் ஏபிஎம்சி சந்தையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடினர். இதில் ஆண்கள், பெண்கள் யாரும் விதிவிலக்கு இல்லை.
இருபாலரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க விற்பனையாளர்களின் அருகே பெரிய கும்பலாக நிற்பதைக் காண முடிந்தது. வழக்கமாக அங்கு வரும் அவர்களின் வாடிக்கையாளர்களும் இன்று காலையில் விற்பனையாளர்களுடன் பேரம் பேசி பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் வந்து கரோனாவின் தாக்கம் எவ்வளவு வேகம் மிக்கது என்பதை அறிவுறுத்திய பின்பே மக்கள் கலைந்து சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT