Published : 28 Mar 2020 03:35 PM
Last Updated : 28 Mar 2020 03:35 PM

கரோனா முன்னெச்சரிக்கை: சிறைக் கைதிகளுக்கும் சமூகவிலகல்

உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வரிசையில் இருக்கும் கைதிகள்; உ.பி. ஹமீபூர் சிறை

லக்னோ

கரோனாவை தடுக்கும் வகையில் சிறைச்சாலைகளில் கைதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இல்லாமல் தனிமைப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.

கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்திலும் வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வீடுகளில் இருந்து வழிபாடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சமூக விலகல் என்பதனை தனிமைப்படுத்துதல் மூலம் உறுதி செய்யும் பணி சிறைச்சாலைகளிலும் நடைபெறுகிறது. நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இல்லாமல் தனிமைப்படுத்தி வைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, உத்தர பிரதேசத்தில் ஹமீபூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உள்ள மத்திய சிறைகளில் வட்டங்கள் வரையப்பட்டு கைதிகள் தனித்தனியாக இருக்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு பெறுவது, உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது, விசாரணை என அனைத்திற்கும் இந்த முறையிலேயே கைதிகள் வரிசையில் நிறுத்தப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x