Published : 28 Mar 2020 03:17 PM
Last Updated : 28 Mar 2020 03:17 PM

சூப்பராக ரெடியானது; கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் தயார்: வாரத்துக்கு 10 பெட்டிகள் தயாரிக்க முடிவு

ரயில் பெட்டி தனித்தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளுடன் இருப்பவர்களைத் தனிமைப்படுத்த ரயில்வே துறை சார்பில் ஏ.சி. வசதி இல்லாத பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணி முடிந்துள்ளது.

இதை ஆய்வு செய்யும் பணி அடுத்த சில நாட்களில் முடிந்தவுடன், ஒவ்வொரு ரயில்வே மண்டலமும், வாரத்துக்கு 10 ரயில் பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணியைத் தொடங்கும்.

கரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுவரை 800க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்குப் போதுமான இட வசதியில்லை.

அவர்களுக்கு இடங்களை வழங்கிட ரயில்வே முன்வந்தது. ஏப்ரல் 14-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நாள்தோறும் இயக்கப்பட்ட 13 ஆயிரத்து 523 ரயில்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. காலியாக இருக்கும் பெட்டிகள் சில மாற்றங்களுடன் தனித்தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், “எந்த மண்டலுத்துக்கு ரயில் பெட்டிகள் தேவையோ அங்கு செய்து அனுப்புவோம். தனிமைப்படுத்தப்படுவோருக்காக சில மாற்றங்கள் பெட்டியில் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நடுவில் இருக்கும் படுக்கை நீக்கப்பட்டுள்ளது. கீழ்படுக்கை உள்ள பிளைவுட் பலகையில் மற்றொரு பலகை செருகப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு பெட்டிக்கு 10 தனித்தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்கள் பொருத்துவதற்காக 220 வோல்ட் மின்சார பிளக்பாயின்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு ஜன்னல் மூடப்பட்டு, மற்றொரு ஜன்னல் திறக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டிக்கு மொத்தம் 4 கழிப்பறைகள், 2 குளியல் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு குளியல் அறையிலும் ஒரு ஹேண்ட் ஷவர், வாளி, கோப்பை வழங்கப்பட்டுள்ளது.

குடிதண்ணீருக்காக ஒவ்வொரு பெட்டியிலும் 4 பாட்டில்கள் வைக்கும் வைக்கும் வகையில் ஹோல்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெட்டிகளில் மருத்துவ ஆலோசனை அறை, மருத்து அறை, கேன்டீன் ஆகியவை இருக்கும்.

பல்வேறு மண்டலங்களும் ஏ.சி.அல்லாத பெட்டிகளைத் தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணிகளைச் செய்து வருகின்றன. தெற்கு ரயில்வே தயாரித்த பெட்டியில் செயற்கை சுவாசக் கருவிகள், படுக்கை, ட்ராலி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x