Last Updated : 28 Mar, 2020 01:36 PM

 

Published : 28 Mar 2020 01:36 PM
Last Updated : 28 Mar 2020 01:36 PM

கரோனாவுக்கு எதிரான போர்: தடுப்புமருந்து கண்டுபிடிக்க பணியைத் தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியை இந்திய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர். இந்திய நோய்தடுப்புவியல் நிறுவனத்தின் சார்பில் நாட்டின் தலைசிறந்த 10 ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, சீனா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடித்த மருந்தை பரிசோதனை முயற்சியாக நோயாளிகளுக்கு செலுத்தியுள்ளனர்.

உலகம் சமுதாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக கரோனா வைரஸ் இருந்து வருகிறது. இந்த வைரஸுக்கு இதுவரை எந்தவிதமான தடுப்பு மருந்துகளும்இல்லை. சமூக விலக்கலும், தனித்து இருத்தல் மட்டுமே வைரஸைக் கொல்வதற்கு தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இதுவரை கரோனா வைரஸுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர், 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய மருத்துவ ஆய்வாளர்கள் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

இது குறித்து இந்திய நோய்தடுப்புவியல் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் அமுல்யா கே. பாண்டா கூறுகையில், “ உண்மையிலேயே கடுமையான சவாலை எனது வாழ்க்கையில் சந்திக்கிறேன். கரோனா வைரஸுக்க எதிராக தீர்வு காண வேண்டும், மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற 24 மணிநேரமும் சிந்தித்து இப்போது களத்தில் இறங்கியுள்ளோம்.

கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. அரசின் சார்பில் சில அனுமதி கிடைக்க வேண்டியுள்ளது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் மெல்ல தேறி வருகிறார்கள். அவர்களுக்கு கரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி என்பது நல்ல செய்தாக இருக்கும். அந்த நோயாளிகளின்உடலில் இருக்கும் எதிர்ப்புச்சக்தி எவ்வாறு கரோனா வைரஸுடன் சண்டையிடுகிறது என்பதை பார்க்கப்போகிறோம். இத்தாலி, ஜெர்மனி, சீனாவில் இருந்து வந்து பயணிகள் தற்போது பல்வேறு துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இப்போதுள்ள நிலையில் அனைத்தையும் விரிவாக விளக்க முடியாது.

இந்த ஆய்வுக்குழுவில் மருந்து வல்லுநர்கள், நோய்எதிர்ப்பு சக்தி குணநலன்களை அறிந்த வல்லுநர்கள், நோய்பரிசோதனை நிபுனர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இதற்கு முன் பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணியில் இருந்தவர்கள். எங்கள் குழுவில் இருக்கும் ஆய்வாளர்கள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து அதை பரிசோதனையில் வைத்துள்ளனர், அது சென்னையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது, தொழுநோய், காசநோய் ஆகியவற்றுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்

கோவிட்-19 வைரஸ் குறித்து மருத்துவர் பாண்டா கூறுகையில்,” பெரும்பாலான வைரஸ்களுக்கு உடலமைப்பு நிலையானதாக இருக்கும். ஆனால்,கரோனா வைரஸ் மிக விரைவாக தனது உருவத்தை, கட்டமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் அதை குறித்து நாம் அணுகுவது கடினமாக இருக்கும். இது போலியோ வைரஸ்போன்றது அல்ல. கோவிட்-19 வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது சவாலானது, அதற்கு காலஅவகாசம் ஆகும். ஆனால்,ஐசிஎம்ஆர், அரசின் உதவிகள் மூலம் விரைவாக முடிக்கமுடியும்.

முதல்கட்டமாக எலிக்கும், அதன்பின் முயலுக்கும், 3வதாக குரங்கிற்கும் கொடுத்து பரிசோதிப்போம். மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து பரிசோதிப்பது என்பது கடைசிநிலை. அது மருத்துவ விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கும்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x