Last Updated : 28 Mar, 2020 12:39 PM

1  

Published : 28 Mar 2020 12:39 PM
Last Updated : 28 Mar 2020 12:39 PM

இந்தியாவில் கரோனா வைரஸ் உருவம் எப்படி இருக்கும்? முதன்முதலாக படங்களை வெளியிட்ட ஐசிஎம்ஆர்

பிரதிநிதித்துவப்படம்

புனே

இந்தியாவில் முதன்முதலாக அறியப்பட்ட கரோனா நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட கரோனா வைரஸின் புகைப்படத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்), தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவை இணைந்து முதன்முதலாக நுண்ணோக்கி மூலம் வெளியிட்டுள்ளன.

இணையதளங்ளில் வலம் வரும் கரோனா வைரஸ் குறித்த படங்கள் அனைத்தும் கரோனா வைரஸ் குறித்த தோற்றத்தைச் சித்திரிக்கும் வகையில் இருக்கும். ஆனால், இந்திய ஆய்வாளர்கள் முதன்முதலாக துல்லியமாகப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் நுண்ணோக்கி மூலம் மின்னணுப் பரிமாற்ற முறையில் படம் பிடிக்கப்பட்டு இந்திய ஜர்னல் ஆப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

“டிரான்ஸ்மிஸன் எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி இமாஜிங் ஆஃப் சார்ஸ்-சிஓவி-2” என்ற தலைப்பில் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சலின், என்ஐவி ஆகியவற்றில் உள்ள ஆய்வாளர்கள் குழு இந்தக் கட்டுரையை எழுதியுள்ளனர்.

இந்தியாவின் முதல் கரோனா வைரஸின் தோற்றம்.

சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பின் வூஹான் நகரில் படித்துவந்த கேரள மாணவிகள் கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தியாவுக்கு வந்தனர். அவர்களிடத்தில் மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது ஒரு மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவியிடம் இருந்து எடுக்கப்பட்ட வைரஸின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸின் புகைப்படமும், அந்தப் பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸும் 99.98 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பார்ப்பதற்கு வட்ட வடிவத்திலும், கூம்பு போன்று மேல்புறத்தையும் கொண்டுள்ளது. கரோனா வைரஸின் மேற்புறத்தில் கிளைக்கோபுரோட்டீனைக் கொண்ட பெப்லோமெரிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அந்தக் கட்டுரையில், “இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளியின் தொண்டைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கரோனா வைரஸின் தோற்றமாகும். இதுதான் இந்தியாவின் முதல் கரோனா வைரஸ் குறித்த முதல் படம். இந்தக் கரோனா வைரஸின் ஒவ்வொரு துகளும் நன்றாகப் பாதுக்காப்பட்டுள்ளது. 75 என்எம் அளவில் இந்தக் கூறுகள் இருக்கின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x