Published : 10 Aug 2015 12:25 PM
Last Updated : 10 Aug 2015 12:25 PM
50 லட்சம் பிஹார் மக்கள் தங்கள் மரபணு மாதிரியை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைப்பர் என இன்று (திங்கள்கிழமை) காலை தான் பதிந்த ட்வீட்டில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் 29-ம் தேதி சுயமரியாதை பேரணியும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 25-ம் தேதி முசாபர்பூரில் பேசிய பிரதமர் மோடி, "நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ பிரச்சினை உள்ளது. ஆனால் ஜனநாயகத்தின் மரபணு அதுபோல் இல்லை. ஜனநாயகத்தில் அரசியல் எதிரிகளுக்கும் நீங்கள் மரியாதை தரவேண்டும்" எனப் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நிதிஷ்குமார் எழுதிய திறந்த மடலில், "உங்கள் விமர்சனம் எனது குடும்ப பரம்பரை பற்றியதாக இருந்தாலும் பிஹார் மக்கள் அவமதிக்கப்பட்டதாகவும் மாநிலத்தின் பெருமை குலைக்கப் பட்டதாகவும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
பிஹார் மக்கள் மீது உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் காழ்ப்புணர்வு இருக்கலாம் என்ற கருத்தை இது நம்பும்படியாகச் செய்கிறது.
இந்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது குறித்து நீங்கள் பரிசீலிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப் பளித்து இதை திரும்பப் பெறுவதன் மூலம் மக்களிடையே உங்கள் மீதான மரியாதை உயரும் என்றே கருதுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதுவரை பிரதமர் தரப்பிலிருந்து இதற்கு எவ்வித எதிர்விணையும் இல்லை. ஆனால், நிதிஷ்குமாருக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பலரும், "பிஹார் என்று குறிப்பிட்டால் அது நிதிஷ்குமாரை குறிப்பிடுவதாகாது" எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை (திங்கள்கிழமை), "அவதூறு விமர்சனத்தை பிரதமர் மோடி திரும்பப்பெறவில்லை. எனவே, இப்பிரச்சினையை மக்கள் மன்றம் மூலம் முன்னெடுத்துச் செல்கிறேன். மரபணு கருத்தை எதிர்த்து 50 லட்சம் பிஹார் மக்கள் தங்கள் மரபணு மாதிரியை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைப்பர். கையெழுத்து இயக்கமும் நடத்தப்படும். வரும் 29-ம் தேதி மாநில அளவிலான சுயமரியாதை பேரணியும் நடைபெறும்" இவ்வாறு தனது ட்விட்டர் மூலம் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
மரபணு விமர்சனத்தை வைத்து நடக்கும் அரசியல், பிஹார் தேர்தலில் முக்கிய பங்களிக்கும். இதை முன்னிலைப்படுத்தி மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த நிதிஷ்குமார் முயல்வார் என அரசியல் நோக்கர் நவாக் கிஷோர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT