Published : 28 Mar 2020 07:34 AM
Last Updated : 28 Mar 2020 07:34 AM
கரோனா வைரஸை கட்டுப்படுத்த 21 நாட்கள் முழு அடைப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதுகுறித்து அவர் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரை முதலிடம் பிடித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு அடைப்பு (லாக் டவுண்) அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதுகுறித்து அவர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அந்த உரையை நாடு முழுவதும் 19.7 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த உரையே தொலைக்காட்சி ‘ரேட்டிங்’கில் முதலிடம் பிடித்துள்ளது.
பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பார்க்) இந்தியா என்ற நிறுவனம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்தும், அவற்றில் எந்த நிகழ்ச்சியை அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்கின்றனர் என்பது குறித்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்து தகவல்கள் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 21 நாட்கள் முழு அடைப்பு குறித்து பிரதமர் மோடி ஆற்றிய உரையை அதிக எண்ணிக்கையில் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளதாக ‘பார்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் ஆற்றிய உரைகளை விட, 21 நாட்கள் சமூக விலகல் குறித்த உரைதான் முதலிடத்தை பிடித்துள்ளது. ‘‘பிரதமர் மோடியின் உரையை 201 சேனல்கள் ஒளிபரப்பின’’ என்று பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சஷி சேகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியை 13.3 கோடி மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர். ஆனால், அதை விடவும் மோடியின் முழு அடைப்பு உரையை 19.7 கோடி தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் 14 மணி நேரம் ஊரடங்கை கடைபிடிக்குமாறு அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த 19-ம் தேதி தொலைக்காட்சியில் மோடி உரையாற்றினார். இந்த உரையை 191 சேனல்களில் 8.30 கோடி மக்கள் பார்த்துள்ளனர் என்று ‘பார்க்’ தெரிவித்துள்ளது.
மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கும் அறிவிப்பு குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அந்த உரையை 163 சேனல்கள் ஒளிபரப்பின. அந்த நிகழ்ச்சியை 6.5 கோடி பேர்தான் பார்த்தனர்.
பண மதிப்பிழப்பு
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியை 114 சேனல்கள் ஒளிபரப்பின. அதை 5.7 கோடி பேர் பார்த்தனர்.
ஆனால், முழு அடைப்பு குறித்த பிரதமர் மோடியின் உரையைதான் தொலைக்காட்சியில் 19.7 கோடி மக்கள் பார்த்துள்ளனர். இதன்மூலம் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி முதலிடம் பிடித்துள்ளது என்று ‘பார்க்’ நிறுவனம் கூறியுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT