Last Updated : 27 Mar, 2020 07:07 PM

 

Published : 27 Mar 2020 07:07 PM
Last Updated : 27 Mar 2020 07:07 PM

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம்: ரூ.11,499 கோடி  நிலுவை ஊதியத்தை விடுவிக்கும் மத்திய அரசு

கோப்புப்படம்

புதுடெல்லி

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் தரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த ஊதியம் ரூ.4 ஆயிரத்து 431 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் மொத்த நிலுவையான ரூ.11ஆயிரத்து 499 கோடியையும் மத்திய அரசு விடுவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால், பல்வேறு தொழில்கள், வர்த்தகம், குறு, சிறு தொழில்கள் முடங்கும் சூழலில் இருக்கின்றன. மக்கள் கைகளில் பணப்புழக்கமும் குறைந்து பொருளாதார மந்தநிலைக்கு இட்டுச் செல்லும்.

இதைத் தவிர்க்கும் வகையிலும் பொருளாதாரத்தைச் சுணக்கமடையாமல் இருக்க, பல்வேறு திட்டஙக்ளை மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஏழை மக்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பிலான பொருளாார நிதித்தொகுப்பு, ரிசர்வ் வங்கியின் வட்டிச் சலுகை, கடன் தவணை கட்ட அவகாசம் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிராமப்புற மக்களிடம் பணப்புழக்கத்தை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்புத் தி்ட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊதியம் தரப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது. அந்த நிலுவை ஊதியத் தொகை அனைத்தையும் மத்திய அரசு விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி இன்று வரை ரூ.4,431 கோடி நிலுவையை மத்திய அரசு விடுவித்தது. வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் மொத்த நிலுவையான ரூ.11 ஆயிரத்து 499 கோடியையும் அரசு விடுவிக்கும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுவிக்கப்பட்ட பணத்தை, 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும்

மேலும், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஊதியத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் உயர்த்தியது. அதன்பின் ரூ.182 லிருந்து ரூ.202 ஆக ஒருவருக்கு உயர்த்தியது. இந்த உயர்த்தப்பட்ட தொகை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 13.62 கோடி பேர் பதிவு செய்துள்ளார்கள். அதில் 8.17 கோடி பேர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் பணி செய்தால் கிடைக்கும் கூலியும் தொடரும். லாக் டவுன் நேரத்தில் குடும்பத்தில் ஊதியம் ஈட்டும் பெண் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நிலத்தில் பணி செய்தாலும் கூலி தொடரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x