Published : 27 Mar 2020 06:11 PM
Last Updated : 27 Mar 2020 06:11 PM
கரோனா வைரஸின் தாக்கத்துக்கு கர்நாடக மாநிலத்தில் 3-வது உயிரிழப்பு இன்று நிகழ்ந்தது. தும்கூரு மாவட்டத்தில் 60 வயது முதியவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்த இந்த முதியவர் எந்த வெளிநாடுகளுக்கும் சென்றதில்லை. ஆனால், இந்த மாதத் தொடக்கத்தில் டெல்லி சென்று அங்கிருந்து ரயில் மூலம் பெங்களூரு வந்தார். அதன்பின் கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சுகதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு ட்விட்டரில் கூறுகையில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் இன்று உயிரிழந்தார். இந்த மாதத் தொடக்கத்தில் இவர் டெல்லி சென்று கடந்த 13-ம் தேதி ரயில் மூலமாக பெங்களூரு திரும்பினார்.
இவரோடு தொடர்புடைய 13 பேரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். இதில் 8 பேருக்கு எடுக்கப்பட்ட சிகிச்சையில் கரோனா இல்லை என்பது தெரியவந்தது. 3 பேர் மருத்துவப் பணியாளர்கள்” எனத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் இன்று 7 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதில் 10 மாதக் குழந்தையும் அடங்கும். மொத்தம் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தும்கூரு மாவட்ட சுகாதார துணை ஆணையர் கே.பிரகாஷ் குமார் கூறுகையில், “வியாழக்கிழமை இரவு இந்த 60 வயது முதியவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிகாரபூர்வமாக மருத்துவ அறிக்கை கிடைத்த நிலையில் காலை 10.45 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார். இது மாநிலத்தில் கரோனா வைரஸுக்கு 3-வது உயிர் பலி” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் கலாபுர்க்கியில் 70 வயது முதியவரும், சிக்காபல்லபுராவில் 70 வயது மூதாட்டியும் கரோனா வைரஸால் உயிரிழந்தனர்.
10 மாதக் குழந்தைக்கு கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இந்தப் பச்சிளங்குழந்தை எந்த வெளிநாட்டுக்கும் செல்லவி்ல்லை. இருப்பினும் கரோனா வந்துள்ளது. அந்தக் குழந்தையைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
மருத்துவ அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்தக் குழந்தையை அவரின் பெற்றோர் கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், இந்தக் குழந்தையின் பெற்றோரோடு தொடர்புடைய 7 பேரை மருத்துவக் குழு தேடி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT