Published : 27 Mar 2020 04:45 PM
Last Updated : 27 Mar 2020 04:45 PM
நாட்டில் கரோனா வைரஸ் பரவுவது தீவிரமடைந்திருப்தால், வங்கி ஊழியர்களைக் காக்கும் வகையில் குறைந்த அளவிலான கிளைகளை மட்டும் இயக்குவது குறித்து வங்கி நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியமாக 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய சேவை தொடர்ந்து வழக்கம் போல் கிடைக்கும். காய்கறி, பழக்கடை, மளிகைக்கடை, இறைச்சிக்கடை, பால்கடை, ஏடிஎம் ஆகியவை வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளோடு வங்கிச் சேவையும் இணைக்கப்பட்டுள்ளதால், குறைந்த ஊழியர்களுடன் வங்கிகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றவேண்டிய சூழலி்ல் இருக்கின்றனர். இதனால், வங்கிக் கிளைகளின் செயல்பாட்டைத் தற்காலிகமாக குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே சில பொதுத்துறை வங்கிகள் தங்கள் கிளைகளின் செயல்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.
இது தொடர்பாக கடந்த 22-ம் தேதி அனைத்து உறுப்பு வங்கிகளுக்கும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
அதில், ''கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கிளைகளைத் திறந்து வைத்து வங்கிச் சேவை செய்யவும், மற்ற கிளைகளைத் தற்காலிகமாக மூடுவது தொடர்பாகவும், மாநில அரசுகள், அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
லாக்-டவுன் நேரத்தில் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இன்றி, வங்கிச் சேவை கிடைக்கும் மாற்று வழிகள் மூலம் வங்கிச் சேவை கிடைக்கத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்'' என்று வங்கிகளிடம் ஐபிஏ கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின படி தற்போது அனைத்து வங்கிகளும் 60 முதல் 70 சதவீத வங்கி ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் வங்கிச் செயல்பாடு குறைக்கும் திட்டத்தில் ஒவ்வொரு 5 கி.மீ. மட்டும் ஒரு வங்கி செயல்படலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, “கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதால், வங்கிகள் செயல்பாடு குறைக்கப்படுவது குறித்து முடிவெடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT