Published : 27 Mar 2020 04:37 PM
Last Updated : 27 Mar 2020 04:37 PM
உலகையே கரோனாவின் தாக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் கேரளத்தில் ஒரு கடைக்காரரின் சமூக இடைவெளி மதிநுட்பம் பாராட்டைக் குவித்துவருகிறது.
இந்திய அளவில் கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளமும் ஒன்று. ஆனால், கேரளம் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளில் மாற்றி யோசித்து அசத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நியாய விலைக்கடைகளின் மூலம் கரோனா உதவித் தொகை, பொருள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பெறுவதற்காக அதிக அளவில் கூட்டம் வரும் என்பதைக் கணக்கிட்டு நியாய விலைக்கடைகளில் சமூக இடைவெளி விட்டு, இப்போதே கிருமிநாசினி மூலம் கட்டம் போடப்பட்டு வருகிறது. ஆனால், கேரளத்திலோ பொதுமக்களின் வீட்டுக்கே ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருள்கள்களின் விற்பனைக்காக திருவனந்தபுரத்தில் இயங்கும் ஒரு கடையில் வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் இடையேயான சமூக இடைவெளி முறை சிறந்த முன்னுதாரணம் ஆகியிருக்கிறது. அதில், விற்பனையாளர் தன் கடையின் உள்ளே இருந்து, வாடிக்கையாளரை நோக்கி ஒரு பிளாஸ்டிக் பைப்பை சரிவாக அமைத்திருக்கிறார்.
சுமார் 2 அடிவரை நீளம் இருக்கும் அந்த பிளாஸ்டிக் பைப்பின் கீழ்பகுதியில் வாடிக்கையாளர் தன் பையை வைத்து சறுக்கிவரும் பொருளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் பொருள்களுக்குரிய பணத்தையும் கையில் வாங்காமல், கடையின் பலகையிலேயே வைக்க வேண்டும். இந்த காட்சியை திருவனந்தபுரம் எம்பி-யான சசிதரூர் தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT