Published : 27 Mar 2020 03:11 PM
Last Updated : 27 Mar 2020 03:11 PM
இளம் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சுய தனிமையை மீறி, தேனிலவுக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டுத் திரும்பினார். இதனால் அவர் மீது கேரள போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வந்தவர்கள் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தால்கூட, சுயதனிமைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், கேரள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சுய தனிமையை மீறி வெளியே சென்றதால் தற்போது வழக்கைச் சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக கொல்லம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் டி.நாராயணன், மாவட்ட ஆட்சியர் பி. அப்துல் நசீர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:
''கொல்லம் மாவட்ட துணை ஆட்சியராக இருப்பவர் அனுபம் மிஸ்ரா. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். மிஸ்ராவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு விடுப்பு எடுத்த மிஸ்ரா, சிங்கப்பூர், மலேசியாவுக்குச் சென்றுவிட்டு கடந்த 19-ம் தேதி கொல்லம் திரும்பினார். அப்போது அவரைப் பரிசோதித்தபோது அவருக்கு கரோனா அறிகுறியும் இல்லை.
மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவரை வீட்டில் தனியாக சுய தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினோம். மிஸ்ராவுக்குப் பாதுகாவலாகச் சென்ற காவலரையும் சுய தனிமைக்கு உட்படுத்தினோம்.
அவரை நாள்தோறும் சென்று மருத்துவ அதிகாரிகள் சந்தித்து உடல்நிலையைப் பரிசோதித்து வந்தனர். ஆனால், நேற்று சென்றபோது மிஸ்ரா இல்லை. வீடு பூட்டியிருந்தது.
மாவட்ட நிர்வாகத்தினர் யாரிடமும் கூறாமல், சுகாதரத்துறை அதிகாரிகள் அனுமதி பெறாமல் மிஸ்ரா வெளிேயறியுள்ளார். தொலைபேசியில் தொரடர்புகொண்டு கேட்டபோது பெங்களூருவில் இருப்பதாக மிஸ்ரா தெரிவித்தார்.
ஆனால், போலீஸார் மூலம் விசாரித்தபோது, மிஸ்ராவின் செல்போன் டவர் உத்தரப் பிரதேசம் கான்பூரில் இருந்தது. எந்த அதிகாரிக்கும் தெரியாமல் மிஸ்ரா கொல்லத்திலிருந்து கான்பூருக்குச் சென்றுள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்தது.
விதிமுறைகளின் படி சுய தனிமையில் இருக்கும் ஒருவர் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி எங்கும் செல்லக் கூடாது. ஆனால், மிஸ்ரா அதை மீறியுள்ளார். மேலும் பெங்களூருவில் எங்கு தங்கியுள்ளார், முகவரி ஆகியவற்றைக் கேட்டுள்ளோம்.
மிஸ்ராவுக்கு கரோனா அறிகுறிகள் இல்லாதபோதிலும், மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் எங்களிடம் தெரிவிக்காமல் சென்றது தீவிரமான குற்றம். அவர் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முறையாக அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
மேலும், மிஸ்ரா மீது, ஐபிசி 188 பிரிவு, 269 பிரிவு, 271 பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு இரு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
கேரள மாநிலத்திலேேய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூட இல்லாத மாவட்டம் கொல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT