Last Updated : 06 Aug, 2015 08:34 AM

 

Published : 06 Aug 2015 08:34 AM
Last Updated : 06 Aug 2015 08:34 AM

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முயற்சி: டெல்லியில் மீண்டும் வருகிறது `டிராம்’ வண்டி

டெல்லியில் நாளுக்கு நாள் அதி கரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டும், பாரம்பரிய சின்னங்களை இணைக் கும் வகையிலும் ஆங்கிலேயர் காலத்தில் இயங்கி வந்த `டிராம்’ வண்டிகளை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு தடைபட்டுப் போன ஷாஜஹானாபாத் மேம் பாட்டுத் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அரசு செயல்படுத்த தொடங்கி யுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயர் களால் 19-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனம் டிராம். 1873-ல் குதிரை பூட்டிய டிராம் கொல்கத்தாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட் டாலும், மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட சென்னையில் தான் 1895-ம் ஆண்டு மின்சாரத்தின் உதவியால் ஓடும் முதல் டிராம் இயக்கப்பட்டது. இதையடுத்து கொல்கத்தா, மும்பை, கான்பூர், டெல்லி, நாசிக் மற்றும் பாட்னாவிலும் டிராம் இயங்கத் தொடங்கியது. ரயில் தண்டவாளத்தை போன்ற இருப்பு பாதைகளின் மீது ஓடும் இந்த டிராம்கள் கடந்த 1930 முதல் 1960-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மெல்ல, மெல்ல நிறுத்தப்பட்டு விட்டன. கொல்கத்தாவில் மட்டும் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த டிராமை தற்போது டெல்லியில் மீண்டும் இயக்க அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1908-ல் டெல்லி பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய செங்கோட்டை, ஜாமியா மசூதி, சாந்தினி சவுக், திகம்பர் ஜெயின் கோயில், ஷிஷ்கன்ச் குருத்வாரா, பழைய மற்றும் புதிய ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஓடிய அதே வழித்தடத்தில் புதிய டிராம்கள் இயங்கும். முன்பு இயங்கியதை போலவே மணிக்கு சுமார் 15 முதல் 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே இந்த டிராம்கள் இயங்கும்.

டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர் களிடம் கூறும்போது, “பழைய டெல்லி நகரமான ஷாஜஹானா பாத்தை மேம்படுத்தும் முயற்சி யில் இந்த டிராம்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன. இந்த நகரின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நிலைநிறுத்த இந்த டிராம்கள் உதவியாக இருக்கும். இவை இங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின் போக்குவரத்துக்கு துணையாக இருப்பதுடன் வாகன நெரிசலையும் கட்டுப்படுத்த உதவும் என எண்ணுகிறோம்” என்றார்.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் பேரரசர் ஷாஜஹானால் அமைக்கப்பட்ட ஷாஜஹானாபாத் எனப்படும் பழைய டெல்லி நகரம் மெல்ல, மெல்ல வாழ்வதற்கு வசதியற்றதாக மாறி வருகிறது. இதற்கு அங்குள்ள பழைய கட்டி டங்கள், குறுகலான பாதைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் முக்கியக் காரணங்கள் ஆகும். இந்த நிலையை மாற்றும் வகையில் பாரம்பரியச் சின்னங் கள் அடங்கிய டெல்லியின் பழைய நகரப்பகுதியை மேம்படுத்தும் பொருட்டு கடந்த 2007-ம் ஆண்டில் `ஷாஜஹானாபாத் ரீடெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்’ எனும் பெயரில் ஒரு நிறுவனம் துவக்கப்பட்டு, பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தது.

டெல்லியின் பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம், இடையில் இயங்காமல் போனது. இந்நிலையில் இதற்கு கேஜ்ரிவால் அரசு மீண்டும் புத்துயிர் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பழங்காலத்து டிராம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அதில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x