Published : 26 Mar 2020 09:58 AM
Last Updated : 26 Mar 2020 09:58 AM
கரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில் அவசர சேவைகளுக்கு செல்லும் போது காத்திருக்க கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது
கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 624 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பயணிகள் ரயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து, தனியார் வாகனங்கள், சரக்கு லாரிப் போக்குவரத்து என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையி்ல் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.
அதில் முக்கியமாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு 2-வது நாளாகத் தொடர்கிறது. இதற்கிடையே அவசர சேவைகளுக்குச் செல்லும் போது தாமதம், தடை இருக்கக்கூடாது என்ற நோக்கில் சுங்கக்கட்டணம் வசூலிப்பை மத்திய நெடுஞ்சாலைத்துறை நேற்று நள்ளிரவு முதல் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிருபர்களிடம் கூறுகையில், “ கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் அவசர சேவைகளுக்குச்செல்லும்போது சுங்கச்சாவடிகளில் நிற்கும்போது ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுகிறது.
அவசர சேவைகளுக்கான அசவுகரியத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், நேரத்தையும் மிச்சப்படுத்தும். அதேசமயம் சாலைப் பராமரிப்பு, சுங்கச்சாவடிகளில் அவசர சேவை போன்றவை வழக்கம் போல் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நாடு முழுவதும் லாக்-டவுன் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைகள், வழிகாட்டல்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடைப்பிடிக்க வேண்டும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT