Published : 25 Mar 2020 08:39 PM
Last Updated : 25 Mar 2020 08:39 PM

கரோனா தொற்று பிரச்சினை; என்பிஆர் - மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கோவிட் - 19 நோய்த் தொற்று பரவுதல் காரணமாக, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்டம் மற்றும் என்பிஆர் புதிய தகவல் சேகரிப்பு மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வருவதற்கு முன்னர் இந்தியாவில் பெரிதாக ஒலித்த குரல் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி போன்றவை. என்பிஆர் குறித்து தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என அரசை எதிர்க்கட்சிகளும், சிறுபான்மை மக்களும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் அனைத்தையும் அள்ளிச் சென்றது.

தற்போது கரோனா பாதிப்பு தற்போது 21 நாள் ஊரடங்கு வரை சென்றுவிட்டது. இதனால் அரசியல் பிரச்சினைகள் அனைத்தும் பின்னுக்குச் சென்று விட்டன. இந்த நேரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் சாத்தியமில்லை. அதனால் என்பிஆர் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பை காலவரையின்றி மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பு:

“2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக, அதாவது (a) முதல் கட்டம் - 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் வீடுகளில் பட்டியல் எடுத்தல் & வீட்டு வசதி கணக்கெடுப்பு மற்றும் (b) இரண்டாவது கட்டம் - 2021 பிப்ரவரி 9 முதல் 28 வரையில் மக்கள் தொகையைக் கணக்கெடுத்தல் என நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதலாவது கட்டத்தின்போதே அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் (அசாம் தவிர) தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர) குறித்த புதிய தகவல்கள் சேகரிப்பதும் செய்வதாக உத்தேசிக்கப்பட்டிருந்தது.

கோவிட் - 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக மத்திய அரசும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் தீவிர எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நாட்டில் கோவிட்-19 கட்டுப்படுத்துவதற்கு இந்திய அமைச்சகங்கள் / துறைகள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை, கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் 24, மார்ச் 2020 தேதியிட்ட உத்தரவின் மூலம் வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

சமூக இடைவெளி பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. மேற்சொல்லப்பட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு, மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் முடிவுகளின்படி 2020 ஏப்ரல் 1 ஆம் தேதியில் தொடங்குவதாக இருந்த 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் மற்றும் என்பிஆர் (NPR) புதிய தகவல்கள் சேகரிக்கும் பணிகள் மற்றும் அவை தொடர்பான களச் செயல்பாடுகள், மறு உத்தரவு வரும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன".

இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x