Published : 25 Mar 2020 07:59 PM
Last Updated : 25 Mar 2020 07:59 PM
கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோயால் தமிழகத்தில் 23க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்தள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தமிழகத்திற்கு போதிய நிதியுதவி அளிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். தாங்கள் அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு முழுமையான அளவில் தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி கரோனாவை எதிர்கொள்ள முழுமையான அளவில் தமிழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு உள்ளிட்டவற்றை எதிர்கொள்ளவும், அடிதட்டு மக்களை பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம்.
1) பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை மேலும் கூடுதலாக 2 மாதங்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக இந்திய உணவுக்கழக சேமிப்பு கிடங்குகளில் உள்ள தானியங்களை தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும்.
2) தமிழகத்தி்ல் 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களும், மற்ற துறைகளில் மேலும் 15 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களும் உள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ள அவர்களுக்கான சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம். அதற்கான 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
3) கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.
4) மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ.500 கோடியாக உயர்த்த வேண்டும்.
5) சிறுகுறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT