Published : 25 Mar 2020 06:11 PM
Last Updated : 25 Mar 2020 06:11 PM
ஒடிசாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் 4 மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் இரவும் பகலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும், கரோனா தொற்று குறித்த சோதனையாலும் கூடுதலாக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
இதுமட்டுமின்றி மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் பயமின்றி தீவிர பங்காற்றி வருகின்றனர். அவர்களின் அளப்பரிய சேவையை பாராட்டி பல்வேறு மாநில அரசுகளும் ஊக்கப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில் ஒடிசா மாநிலத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் அனைவருக்கு அடுத்த 4 மாதங்களுக்கான சம்பளத்தை முன்கூட்டியே வழங்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT