Last Updated : 25 Mar, 2020 03:21 PM

1  

Published : 25 Mar 2020 03:21 PM
Last Updated : 25 Mar 2020 03:21 PM

வியக்காதீர்கள்; ஒரு கேஸ்கூட இல்லை: கரோனா வைரஸ் நோயாளி ஒருவர் கூட இல்லாத மாநிலம்

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் : கோப்புப்படம்.

ராஞ்சி

கரோனா வைரஸ் என்ற வார்த்தை கேட்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆடிப்போயுள்ள நிலையில் ஒரு கரோனா வைரஸ் நோயாளி கூட இல்லாத மாநிலம் இருக்கிறது.

உலகமே அஞ்சும் வார்த்தை கரோனா வைரஸ். உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 4.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,941 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் மெல்லப் பரவிய கரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை இங்கும் நிலைநாட்ட முயல்கிறது. இதுவரை 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 11 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கரோனாவைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது.

அதிரடியாக முடிவெடுத்த பிரதமர் மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று அமலுக்கு வந்தது. அனைத்து மாநிலங்களும் தீவிரமான ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஆனால், கரோனா வைரஸின் கோரப் பார்வை படாத ஒருமாநிலம் இருக்கிறென்றால் அது ஜார்க்கண்ட் மாநிலம்தான். அங்கு இதுவரை கரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை என்றபோதிலும் இந்த அரக்கனை வரவிடாமல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை கரோனா அறிகுறிகளுடன் இருந்த 77 பேரின் ரத்த மாதரிகளைப் பரிசோதித்தோம், அதில் 61 பேருக்கு கரோனா இல்லை. 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கரோனா இல்லாத மாநிலமாக இருக்கிறோம்.

இத்தாலி, சீனா, துபாய் நாடுகளில் இருந்து வந்த 450 பேரையும் கண்காணித்து வருகிறோம். இதுவரை எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. கரோனா வைரஸ் நோய் இல்லாத மாநிலமாக இருப்பதற்கு முதல்வர் ஹேமந்த் சோரனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்” என்றனர்.

21 நாட்கள் ஊரடங்கு குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகையில், “ 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை முன்கூட்டியே அமல்படுத்தி இருக்க வேண்டும். எந்த சூழலையும் எதிர்கொள்ள ஜார்க்கண்ட் மாநிலம் தயாராக இருக்கிறது. மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே ராஞ்சிக்கு அருகே இருக்கும் யோஞ்ச்ஹாரி கிராமத்தில் உள்ள மக்களிடம் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கரோனா குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்குக் கூட கரோனா வைரஸ் குறித்த புரிதல் இல்லை. அதுகுறித்து அறியவும் இல்லை.

பல்வேறு மாநிலங்களும் தங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா வைரஸ் குறித்து தீவிரமான பிரச்சாரங்களைச் செய்து வருகிறார்கள். ஆனால், தலைநகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கிராம மக்களுக்கு கரோனா குறித்துத் தெரியாதது வியப்பாக இருக்கிறது.

மேலும், இதுவரை இந்தக் கிராமத்துக்கு மாநில சுகாதாரத்துறையினர் சார்பில் எந்த அதிகாரியும் வந்து கரோனா வைரஸ் குறித்து விழி்ப்புணர்வு ஏதும் ஏற்படுத்தவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். இங்குள்ள மக்களும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார்கள். மாறாக மலைவாழ் மக்கள் முறைப்படி பாரம்பரிய மருத்துவத்தையே பின்பற்றி வருகின்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x