Published : 25 Mar 2020 12:53 PM
Last Updated : 25 Mar 2020 12:53 PM
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்போது, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்கப் போதுமான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக மத்திய அரசும், மாநில அரசுகளும் இறங்கியுள்ளன. அதில் மிக முக்கியமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இந்த 21 நாட்களும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளான காய்கறிக் கடைகள், பழக்கடைகள், சிறுமளிகை கடைகள், வங்கிகள், ஏடிஎம் சேவை உள்ளிட்டவை தொடர்ந்து இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் தங்கு தடையின்றிக் கிடைக்க மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் உறுதி செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
''21 நாட்கள் ஊரடங்கின்போது அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும், சுய தனிமையில் இருப்போர் தீவிரமாகக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்தக் காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் தடையின்றி கிடைக்கவும், போக்குவரத்தில் சிக்கல் இல்லாமல் கொண்டு செல்லவும் உறுதி செய்ய வேண்டும்.
21 நாட்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் அதே நேரத்தில், அத்தியாவசிய சேவைகள், பொருட்கள் தயாரித்தல், செயல்படுத்துதல், போக்குவரத்து, பகிர்மானம், இருப்புவைத்தல் ஆகியவற்றைத் தடையின்றி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை உருவாக்கி, மக்களுக்கு உதவி எண்களை அறிவிக்க வேண்டும். மக்களிடம் இருந்து வரும் எந்தவிதமான குறைகளையும், அத்தியாவசியப் பொருட்கள் அல்லது சேவைகள் கொண்டு செல்வதில் ஏதேனும் சிக்கல்களை மக்கள் சந்தித்தாலும் அதைத் தீர்த்து வைக்க வேண்டும்.
இந்தப் பணிகள் அனைத்தையும் கண்காணிக்க தனியாக ஒரு அதிகாரியை நியமித்து மாவட்டத்தையும், மாநில நிர்வாகத்துக்கும் பாலமாக இருக்குமாறு செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் தடையின்றி மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லும்போது தனி அதிகாரி தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியளார்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இலவச உதவி எண்களை வழங்க வேண்டும்.
புதிதாக கட்டுப்பாட்டு அறை, அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு ஒரு அதிகாரியையும் உடனடியாக நியமிக்க வேண்டும். உதவி எண்கள் அனைத்தையும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்''.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT