Published : 25 Mar 2020 12:00 PM
Last Updated : 25 Mar 2020 12:00 PM
கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தங்கி இருக்கும், மருத்துவமனை நடத்தும் இடத்தை காலி செய்ய நெருக்கடி தரும், சண்டையிடும் நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல துணை ஆணையர்களுக்குத் தேவையான அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸைத் தடுக்கும் பணியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும் கரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை இந்தியாவில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் இரவு பகல் பாரமல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், வாடகை வீட்டில் குடியிருந்தாலோ, வாடகை இடத்தில் மருத்துவமனை நடத்தி வந்தாலோ அந்தக் கட்டிடத்தையும், இடத்தையும் காலி செய்யக் கோரி உரிமையாளர்கள் நெருக்கடி தருவதாக மருத்துவர்கள் சார்பில் மத்திய அரசுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு ரெசிடென்ஸ்ட் டாக்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதில், “கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்களைக் காலி செய்யக்கோரி கட்டிட உரிமையாளர்கள் சண்டையிடுவதாலும், நெருக்கடி தருவதாலும், பல மருத்துவர்கள் சாலையில் உடைமைகளுடன் நிற்கிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக டெல்லி போலீஸார், உள்துறைச் செயலாளருடன் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறுகையில், “ மருத்துவப் பணியில் இருப்போருக்கு தொந்தரவு கொடுக்கும் செய்தியைக் கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் மருத்துவர்களின் சேவையை நாடே பாராட்டுகிறது. இதைப் புரிந்து நில உரிமையாளர்கள் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அரசு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில், “கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்கள் வசிக்கும் வாடகை வீடுகள், அவர்கள் நடத்தும் மருத்துவனை ஆகியவற்றைக் காலி செய்யக் கோரி கட்டிட உரிமையாளர்கள் கொடுக்கும் நெருக்கடி கரோனாவுக்கு எதிராகப் போராடும் நமது வேரையே அழிக்கும் செயல்.
அத்தியாவசியப் பணியில் இருப்பவர்களை, அவர்களின் பணியைத் தொடரவிடாமல் இடையூறு செய்வதாகும். ஆதலால், மருத்துவர்களுக்குத் தொந்தரவு அளிக்கும் நில உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டஆட்சியர், நகராட்சி ஆணையர்கள், போலீஸ் துணை ஆணையர்கள் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அவர்கள் மீது கடுமைான நடவடிக்கை எடுத்து, உரிய சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT