Published : 25 Mar 2020 08:18 AM
Last Updated : 25 Mar 2020 08:18 AM
இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் நாடுமுழுவதும் 21 நாள் லாக்டவுனை பிரதமர் மோடி நேற்று அறிவித்தைதத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் காலவரையின்றி மூடப்பட்டது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட காலங்களில் வரும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டிருந்தது. இந்த அமர்வு காணொலி மூலம் வழக்கு விசாரணையை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து அந்த அமர்வும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு முதல் நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். ஆதலால் நாளை(25-ம்தேதி) நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் ஆகியோர் காணொலி மூலம் 15 வழக்குகளை விசாரிக்க திட்டமிட்டிருந்தார்கள்.
அதற்கான வழக்குகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவால் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 21 நாட்களுக்குப்பின் எப்போது நீதிமன்றம் செயல்படும், அவசரமான வழக்குகள் விசாரிக்கப்படுமா என்பது குறித்து என்தவிதமான தகவலும் இல்லை.
கடந்த 23-ம் ேததி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்துக்கு வர வேண்டாம். முக்கியமான , அவசரமான வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும், வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து வழக்கு விசாரணையை நடத்தலாம் எனத் தெரிவித்திருந்தது.
மேலும், வீடியோ கான்பிரஸிங் மூலம் நடக்கும் விசாரணையை யாருக்கும் பகிரக்கூடாது, அந்த வீடியோ லிங்குகளையும் யாருக்கும் பகிரக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT