Published : 25 Mar 2020 08:01 AM
Last Updated : 25 Mar 2020 08:01 AM
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 904 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரி வித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேசிய நோய் தடுப்பு மையம் (என்சிடிசி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அமைச்சர் கூறியதாவது:
கரோனா வைரஸ் தொடர்பாக என்சிடிசி கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளும் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் கேள்விகளுக்கு பதில் அனுப்பப் பட்டிருக்கிறது.
போர்க்களத்தில் முன்னணியில் நிற்கும் போர் வீரர்கள் போலஎன்சிடிசி ஊழியர்கள், விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்துநாட்டு மக்களுக்காக தன்னலமின்றி சேவையாற்றி வரும் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
காய்ச்சல் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்லக்கூடாது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவேண்டாம். தற்போதைய நிலையில் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது.
சமூக விலகலை உறுதியுடன் கடைபிடியுங்கள். மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 35,073 பேர் 28 நாட்கள் தனிமைக் காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
இப்போதைய நிலையில் நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 904 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 12,872 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT