Published : 25 Mar 2020 06:29 AM
Last Updated : 25 Mar 2020 06:29 AM

போதுமான உணவு தானியம் கையிருப்பு உள்ளது: இந்திய உணவுக் கழக தலைவர் தகவல்

புதுடெல்லி

இந்தியாவிடம் போதுமான உணவு தானிய கையிருப்பு உள்ளது என்று இந்திய உணவுக் கழக(எப்சிஐ) தலைவர் டி.வி. பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

2019-20- நிதியாண்டில் இந்தியா வின் உணவு தானிய உற்பத்தி 29.2 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்இந்தியாவின் ஆண்டுத் தேவையே5 கோடி முதல் 6 கோடி டன் வரையிலான உணவு தானியங்கள் மட்டுமே. தற்போது நாட்டின் கைவசம் உள்ள கிடங்குகளில் 10 கோடி டன் உணவு தானியங்கள் உள்ளன. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆனால் போதுமான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. எனவே கோதுமை, அரிசி குறித்து மக்கள்கவலைப்பட தேவையே இல்லை.

தேவைப்பட்டால் நியாய விலைக் கடைகள் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கும் உணவு தானியங்களை அளிக்க முடியும். இதற்கான உத்தரவுகளை மத்திய உணவு விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பிறப்பித்துள்ளார். ஆனால் 130கோடி மக்கள் தொகை கொண்டநாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உணவு தானியங்களின் விலை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

நாட்டின் பல மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலை எழுந்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு அனைத்துமாநிலங்களுக்கும் 3 கோடி டன்கோதுமை, அரிசி தேவை. இதற்கான கையிருப்பு உள்ளது. வரும் ஏப்ரலுக்குள் 6.4 கோடி டன் உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகத்துக்கு வந்து சேரும்.

எனவே மாநில அரசுகள் தேவையான உணவு தானியங்களை எப்சிஐ கிடங்கிலிருந்து எளிதாகப் பெற முடியும். மேலும் மாநில அரசுகள் கடனாக உணவு தானியங்களைப் பெற முடியும். இதனால் அரசிடம் நிதியிருப்பு இல்லை என்ற பயமும் வேண்டாம்.

நடப்பு நிதியாண்டில் 11.74 கோடி டன் கோதுமை, 10.62 கோடி டன் தானியங்கள் உற்பத்தி நடைபெற்று அவை எப்சிஐக்குக் கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் சீனாவிடமிருந்தும் நமக்கு உணவுதானியங்கள் கிடைக்கும். எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x