Published : 24 Mar 2020 06:02 PM
Last Updated : 24 Mar 2020 06:02 PM
உத்தரப் பிரதேசம் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் வெளிநாட்டுக்கே செல்லாத 47 வயதுப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததால், அதிகாரிகளும், மருத்துவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த மாவட்டத்தில் மட்டும் கரோனா வைரஸுக்கு 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அ்ங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார்.
இதுகுறித்து கவுதம் புத்தநகர் மாவட்ட ஆட்சியர் பி.என். சிங் நிருபர்களிடம் கூறுகையில், “கவுதம் புத்த நகரைச் சேர்ந்த 47 வயதுப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இவர் வெளிநாட்டுக்கே சென்றதில்லை. அந்தப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த பெண்ணின் கணவர், மகள் இருவரையும் தனிமைப்படுத்தி அவர்களின் குடியிருந்த அடுக்கு மாடிப்பகுதியையும் சீல் வைத்து மூடியுள்ளோம். யாரும் வெளியே செல்லால் புதிதாக யாரும் நுழைய முடியாமல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தக் குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது, ஆதலால், 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை யாரும் அங்கிருந்து செல்லாதவகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இதுவரை வெளிநாட்டுக்கே சென்றதில்லை. ஆனால், அவரின் கணவர் ஒரு கணக்குப் பதிவாளர் என்பதால், அவரைச் சந்திக்க சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அவர் மூலம் வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தற்போது அந்தப் பெண்ணின் கணவர், மகளுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது முடிவுக்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT