Last Updated : 24 Mar, 2020 05:58 PM

 

Published : 24 Mar 2020 05:58 PM
Last Updated : 24 Mar 2020 05:58 PM

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை இன்னும் தீவிரமாக கருதியிருக்க வேண்டும்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸை மத்திய அரசு இன்னும் தீவிரமாக எடுத்துக்கொண்டு முன்கூட்டியே முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.மார்ச் 2-ம் தேதி வரை மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் பயன்படும் முகக்கவசம் குறித்த விவரங்களை தெரிவிக்காதது குற்றமாகும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதலே மத்திய அரசு கரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை உடனடியாகக் களைவதற்கான வழிகளைக் கையாண்டிருக்க வேண்டும். மத்திய அரசின் தோல்வியால், இப்போது மக்கள் வேதனைப்படுகிறார்கள்.

நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்தத் துயரங்களை முழுமையாகத் தவிர்த்திருக்கலாம். நமக்குத் தயாராவதற்கு ஏராளமான நேரம் இருந்தது. கரோனா வைரஸ் குறித்த மிரட்டலை தீவிரமாக எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக நாம் தயாராகி இருந்திருக்கலாம்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மருத்துவர் கம்னா கக்கரின் ட்விட்டையும் ராகுல் காந்தி ரீ ட்வீட் செய்து தனது தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த மருத்துவர் கம்னா கக்கர், “பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கின்போது மாலை நேரத்தில் மக்களைக் கைதட்டியும், ஒலி எழுப்பக் கூறியதை விமர்சித்து, நாட்டில் என 95 முகக்கவசம் பற்றாக்குறையாக இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், “மார்ச் 2-ம் தேதி வரை மருத்துவப் பணியாளர்கள் என்னவிதமான பாதுகாப்பு உடைகள் அணிய வேண்டும் என்பதைக் குறிப்பிடாமல் இருந்தது அரசின் மிகப்பெரிய குற்றமாகும். அதுமட்டுமல்லாமல் சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், என்90 முகக்கவசங்கள் போன்றவற்றை மார்ச் 19-ம் தேதி வரை ஏற்றுமதி செய்ய அனுமதித்து போன்றவற்றை இந்த தேசம் அறிவது அவசியம்.

கரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் உங்கள் திட்டத்தில் இதுதான் தவறான செயல்பாடுகள். மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் கைதட்டல்கள் தேவையில்லை. அவர்களுக்கு என்-95 மாஸ்க், ஹஸ்மத் பாதுகாப்பு உடை, கவச உடை, கையுறை, கண்ணாடி, ரப்பர் ஷூக்கள் போன்றவைதான் தேவை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x