Published : 24 Mar 2020 05:04 PM
Last Updated : 24 Mar 2020 05:04 PM
நாட்டில் கரோனா வைரஸ் தாக்கத்தால் மாநிலங்கள்தோறும் லாக் டவுன் நடந்து வரும் நிலையில் வேலையிழந்து தவி்க்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்,, சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்திரசிங் பாஹேல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கும் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திலும், வேலையில்லாமல் தவிக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்தாவது:
''நாட்டில் 4.4 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கரோனா வைரஸால் ஏற்பட்ட லாக் டவுன் பிரச்சினையால் அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஆபத்தான எதிர்காலத்தை நகர்புறங்களி்ல் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசம் கரோனா வைரஸ் எனும் மிகப்பெரிய தொற்று நோயில் சிக்கி இருக்கிறது. அதிலிருந்து விடுபடவும், சமாளிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். அதிலும் அமைப்புசாரா துறைகளில் கரோனா வைரஸ் பரவும், லாக் டவுனும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு அஞ்சி தங்கள் சொந்த ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றுவி்ட்டனர்.
உலகிலேயே அதிகமான மக்களுக்கு வேலை வழங்கும் நாடாக இருக்கும் இந்தியாவில், 4.4 கோடி தொழிலாளர்கள் ஆபத்தான எதிர்காலத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். உலக அளவில் கனடா உள்ளிட்ட நாடுகள், கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதாச் சீரழிவிலிருந்து மக்களை மீட்கும் வகையில் பொருளாதாரத் திட்டத்தை அறிவித்துவிட்டார்கள்.
இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களில் உள்ள கட்டுமான நலவாரியம், அமைப்புகள் தொழிலாளர்களின் நலனுக்காக அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக வேலையிழந்து தவிக்கும் அந்தத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பல நல உதவிகளை வழங்க முடியும். மாநில நலவாரியங்கள் மூலம கடந்த 2019, மார்ச் 31-ம் தேதி வரை ரூ.49,688 கோடி நிதி இருக்கிறது. அதில் ரூ.19,379 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அந்த பணத்தில் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும்”.
இவ்வாறு சோனிய காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT