Published : 24 Mar 2020 08:30 AM
Last Updated : 24 Mar 2020 08:30 AM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் உள்ள 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக லாக்-டவுன் செய்யப்பட்டுள்ள, மொத்தம் 548 மாவட்டங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் அஞ்சும் ஒரே வார்த்தை இப்போது கரோனா ஒன்றுதான் கண்களுக்கு புலப்படாத எதிரியாக அலையும் கரோனா, உலகளவில் 15 ஆயிரம் மக்களை கொன்றுகுவித்துள்ளது, 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவிலும் தனது ஆட்டத்தைக் கரோனா வைரஸ் குறைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் 471 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் பலியாகியுள்ளனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பின் பெயரில் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால்தான் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்பதை உணர்ந்த மாநில அரசுகள் லாக்-அவுட் முடிவை எடுத்தன. மேலும், நாடுமுழுவதும் 80 மாவட்டங்களில் லாக்-டவுனையும் மத்திய அரசு எடுத்தது.
ஆனால் பல இடங்களில் மக்கள் லாக்-டவுனை தீவிரமாக எடுக்கவில்லை என்பது பிரதமர் மோடி நேற்று ட்விட்டரில் வேதனை தெரிவித்தார். மேலும் லாக்-டவுனை நடைமுறைப்படுத்தும் மாநிலஅரசுகள் சட்டம் ஒழுங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று ஏராளமான மாநிலங்கள் வரும் 31-ம் தேதிவரை மாநில எல்லையை மூடி, மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் லாக்-டவுனை அறிவித்துள்ளன. இதில் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முழுமையான லாக்-டவுனை அறிவித்துள்ளன.
இதில் பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுமையான 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதிவரை பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளிேயற தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் சண்டிகர், டெல்லி, கோவா, ஜம்மு காஷ்மீர்,நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், லடாக், திரிபுரா, தெலங்கானா, சத்தீஸ்கர், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், மேகாலயா, ஜார்கண்ட், பிஹார், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், தமிழகம், கேரளா, ஹரியாணா, டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹாவேலி, கர்நாடகா, அசாம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதிவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எதும் இயங்காது, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியேவர அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா மாநிலங்களின் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், ஊடரங்கு உத்தரவு பிறப்பித்த பின் தொடர்ந்து அது எவ்வாறு நடைமுறையில் இருக்கிறது, மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை 24 மணி நேரமும் கண்காணியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளா். ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள், சட்டம் ஒழுங்கு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கவுபா வலியுறுத்தியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT