Last Updated : 23 Mar, 2020 04:37 PM

 

Published : 23 Mar 2020 04:37 PM
Last Updated : 23 Mar 2020 04:37 PM

கரோனா தடுப்பு: 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை பரோலில் அனுப்ப குழு : மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறைகளில் 7 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் கைதிகளை 4 முதல் 6 வாரங்கள் பரோலில் விடுவிக்க மாநில அரசுகளும்,யூனியன் பிரதேசங்களும் விரைவில் குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில் சிறையில் கைதிகளின் நெருக்கடியை குறைக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 16-ம் தேதி தாமாகவே முன்வந்து வழக்காக உச்ச நீதிமன்றம் பதிவு செய்தது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சிறையில் கைதிகளின் கூட்டம் குறைவாக இருத்தலும், அவர்களுக்கு இடையே சமூக இடைவெளியை பராமரிப்பதும் அவசியமாகும். சிறைகளில் கைதிகளுக்கு இடையே சமூக இடைவெளியே கொண்டுவராவிட்டால் நிலைமை மோசமாகும்


நாட்டில் தற்போது 1,339 சிறைகள் இருக்கின்றன, அதில் ஏறக்குறைய 4 லட்சத்து 66 ஆயிரத்து 84 ைகதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்கின்படி சிறையில் 117.6 சதவீதம் இடநெருக்கடி இருக்கிறது.

இது உத்தரப்பிரதேச மாநில சிறையில் 176 சதவீதமும், சிக்கிம் மாநில சிறையில் 157 சதவீதமும் இடநெருக்கடி நிலவுகிறது.
கரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கியக்காரணமே, நெருக்கடியான சூழலில் வாழ்வதும், சமூக இடைவெளியை பின்பற்றாததும்தான் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், சூர்யகாந்த் ஆகியோர் தலைமையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், “ மாநில சிறைகள், யூனியன் பிரதேச சிறைச்சாலைகளில் குற்ற வழக்குகளில் 7ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை 4 வாரம் முதல் 6 வாரங்கள் வரை பரோலில் விடுவிக்க ஆய்வு செய்ய வேண்டும்

கரோனா வைரஸ் சிறைச்சாலைகளுக்குள் கைதிகளுக்கு இடையே பரவாமல் தடுக்க சமூக இடைவெளி அவசியம். ஆதலால் மாநில அரசு உடனடியாக உயர் மட்டக்குழு ஒன்றை, மாநில சட்டசேவை ஆணையத்துடன் ஆலோசித்து அமைக்க வேண்டும்.

அந்த குழுவில் மாநில உள்துறை செயலாளர், மாநில சட்ட சேவை அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற வேண்டும். 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை 6 வாரங்கள் வரை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும். சிறையில் நிலவும் இடநெருக்கடியைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x