Published : 23 Mar 2020 03:34 PM
Last Updated : 23 Mar 2020 03:34 PM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தை மூடி, வாயில்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட உள்ளது, மிகவும் அவசரமான வழக்குகள் காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.கே. பாப்டே தெரிவித்துள்ளார்.
நாளை மாலைக்குள் அனைத்து வழக்கறிஞர்கள் சேம்பர்களும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தை மூட வேண்டும், காணொலி மூலம் வழக்குகளை விசாரிக்க வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் ஆகியவை வலியுறுத்தி இருந்தன. இது தொடர்பாக இன்று காலை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தலைமையில் 33 நீதிபதிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எல்.என்.ராவ், சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எந்த வழக்கையும நேரடியாக விசாரி்க்க மாட்டார்கள். கரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால், வழக்கறிஞர்கள் சேம்பர், நீதிபதிகள் சேம்பர் அனைத்தும் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனைத்து வழக்கறிஞர்களும் தங்கள் வீடுகளில் இருந்துபடியே காணொலி மூலம் வழக்கு விசாரணையில் ஈடுபடலாம்
வழக்கறிஞர்கள் எவ்வாறு காணொலி மூலம் வாதிடலாம் என்பதற்குரிய வீடியோ லிங்க் விரைவில் வழங்கப்படும், அதற்கான டவுன்லோடு லிங்குகளும் வழங்கப்படும். அவசரமான வழக்குகள் மட்டும் காணொலி மூலம் விசாரிக்க இந்த முடிவு எடுக்கப்படுகிறது. காணொலி மூலம் வாதிடும்போது வழக்கறிஞர்கள் தங்களின் சொந்த அலுவலகத்தில் இருந்தவாரே வாதிடலாம்.
உச்ச நீதிமன்றத்துக்குள் நுழைவதற்கு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மின்னனு நுழைவுஅட்டை ரத்து செய்யப்படும். நாளை மாலை 5 மணி்க்குள் வழக்கறிஞர்கள் சேம்பர் சீல் வைக்கப்பட்டு மூடப்படும்” எனத்தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT