Published : 23 Mar 2020 02:57 PM
Last Updated : 23 Mar 2020 02:57 PM
கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, தீவிரம் தெரியாமல் மக்கள் அலைவது இத்தாலி, ஜெர்மனி பாதையில் இந்தியாவும் பயணிக்கிறதா என்ற அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு இந்தியாவில் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ரயில் போக்குவரத்தை முன்கூட்டியே முடக்கி இருக்க வேண்டும் என சிவசேனா கட்சியி்ன் அதிகாரப்பூர்வ நாளேடானா சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி திடீரென எடுத்தார், மக்களை சிந்திக்க அதிகமான நேரம் கொடுக்காமல் விடாமல் நடவடிக்கையை வேகப்படுத்தினார். அதேபோல, ரயில் சேவையையும் முன்கூட்டியே நிறுத்தி இருக்க வேண்டும்.
மும்பையில் புறநகர் ரயில்களை முன்கூட்டியே நிறுத்தி இருந்தால், மும்பையில் கரோனா நோயாளிகள் திடீரென அதிகரித்து இருக்கமாட்டார்கள். ஆனால், ரயில்வே அதிகாரிகள் அதைச் செய்யவில்லை. சூழலின் முக்கியத்துவம் தெரியாமல் இருந்துவிட்டார்கள்.
கரோனா வைரஸின் வீரியம், தாக்கம், பாதிப்பு தெரியாமல் விழிப்புணர்வு இ்ல்லாமல், மக்கள் அலைகிறார்கள். இதைப் பார்க்கும் போது இத்தாலி, ஜெர்மனி பாதையில் இந்தியா பயணிக்கிறதா என்ற அச்சம் வருகிறது.
இத்தாலியும், ஜெர்மனியும் கரோனா வைரஸ் குறித்து பெரிதாக கவலைப்படாமல் இப்போது சிக்கலில் இருக்கின்றன. இத்தாலி, ஜெர்மனி செய்த தவறுகளையே தொடர்ந்து இந்தியாவும் செய்வதாக கருதுகிறோம். மக்கள் கூட்டம் சேர்வது நோய் வேகமாகப் பரவுவதற்கு ஆபத்து நிறைய இருக்கிறது.
இத்தாலியில் உள்ள மிலன், வெனிஸ் நகரம் ஏறக்குறைய சுடுகாடு போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தங்கள் உறவுகளை இழந்தவர்கள் கூட இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் இருக்கிறது. ரோம் நகரின் தெருக்கள் வெறிச்சோடி இருக்கிறது. ஜெர்மனியிலும் அப்படித்தான் இருக்கிறது
கடந்த 2 நாட்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளபோதே சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 50 ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துமனையும், ஒரு படுக்கை மட்டுமே இருக்கிறது, நமது நாட்டின் மக்கள் தொகை 130 கோடி என்பதை மறந்துவிட்கூடாது.
சமூக இடைவெளி கொடுக்க வேண்டும் என்பதை மறந்து, இத்தாலி மக்கள் தெருக்களில் நடமாடியதால்தான், கரோனா நோய் வேகமாகப் பரவியது. எந்தவிதமான ஒழுக்கத்தையும் கடைபிடிக்காத காரணத்தால்தான் அதற்கான விலையை இத்தாலி மக்கள் கொடுத்து வருகிறார்கள்.
அதேபோல இந்தியர்களும் அதேவழியில் பயணிக்கிறார்கள், கைதட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கூடுகிறார்கள். உண்மையான தேசபக்தி என்பது இப்போது வீட்டில் இருப்பதுதான.
கடந்த 1896-ம் ஆண்டு பிளேக் நோய் தொற்று வந்தபோது, லோகமான்ய திலகர், கோபால் கங்கேஷ் அகர்கர் ஆகியோர் தங்களை சுயதனிமைப்படுத்திக்கொண்டனர். மக்கள் நகரத்தைவி்ட்டுச் சென்று, டென்ட் மூலம் காடுகளில் தங்கினார்கள். இந்த முறை நாம் வீடுகளில் தங்கி இருக்கிறோம்
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT