Published : 23 Mar 2020 10:53 AM
Last Updated : 23 Mar 2020 10:53 AM
தலைநகர் டெல்லியில் உள்ள ஐஐடி ஆய்வுக்குழு கரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் செலவு குறைந்த பரிசோதனை வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளது, இதனால் பெரும்பாலானோர் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செலவு குறைவு பரிசோதனை முறையை புனேயில் உள்ள வைராலஜி தேசிய கழகம் கிளினிக்கல் மாதிரிகளைக் கொண்டு பரிசோதித்து இதற்கு அங்கீகாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தொற்று வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் வைரஸ் பரிசோதனை முறைகள் கைகொடுக்கும் என்று ஐஐடி டெல்லி கூறுகிறது.
இதற்கு “probe-free detection assay” என்பது மேம்படுத்தப்பட்டு அதன் உணர்திறன் பரிசோதனைகள் ஐஐடி ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
தனியார் பரிசோதனைக் கூடங்களில் கோவிட் -19 சோதனைக்கான கட்டணம் ரூ.4,500ஐ மிகக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. என்.ஏ.பி.எல், அங்கீகாரம் உள்ள அனைத்து மருத்துவ சோதனைக் கூடங்களிலும் கோவிட்-19 சோதனை நடத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் குறைவான செலவில் கோவிட்-19 வைரஸை கண்டுபிடிக்கும் சோதனை முறை குறித்து , “அதாவது ஒப்பீட்டு மரபணு வரிசை பகுப்பாய்வின் மூலம் கோவிட்-19-ன் தனித்துவமான பகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த தனித்துவ பகுதிகள் மற்ற மனிதத் தொற்று கரோனா வைரஸ்களில் இல்லாதது என்பதால் மனிதனைத் தொற்றும் கரோனாவை மட்டுமே குறிப்பிட்டு கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது” என்று இந்த ஆய்வுக்குழுவின் முன்னணி உறுப்பினர் பேராசிரியர் விவேகானந்தன் பெருமாள் தெரிவித்தார்.
மற்றொரு பேராசிரியர் மனோஜ் மேனன் கூறும்போது, தற்போதைய கோவிட் - 19 டெஸ்ட் முறைகள் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ அடிப்படையிலானது ஆனால் நாங்கள் கண்டுபிடித்தது புரோப் -ஃப்ரீ டெஸ்ட் ஆகும். இதன் மூலம் செலவு குறையும் ஆனால் துல்லியம் குறையாது.
பெரிய உபகரணங்கள் இல்லாமலேயே கரோனா உண்டா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் வகையில் நீண்ட சோதனைகள் இல்லாதவகையில் மேற்கொள்ளப்படுவதாகும்.
இந்தச் சோதனை முறையை புனேயில் உள்ள தேசிய வைராலஜி கழகம் அங்கீகரித்தால் அது பலருக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT