Published : 23 Mar 2020 07:34 AM
Last Updated : 23 Mar 2020 07:34 AM
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கம் மூலம் 'பாதுகாப்பான கைகள்' என்ற புதிய சவாலை அண்மையில் அறிமுகம் செய்தார். இந்த சவாலை ஏற்று பல்வேறு பிரபலங்கள் தங்களது கைகளை சோப்பு போட்டு கழுவி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இவற்றை டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகழாரம் சூட்டி வருகிறார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன், கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பது குறித்து புன்னகை ததும்பும் முகத்துடன் விளக்கம் அளித்துள்ளார். அந்த சிறுவனுடன் மேலும் 2 சிறுவர்கள் வீடியோவில் உள்ளனர். இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'பாதுகாப்பான கைகள் சவால் குக்கிராமத்தையும் சென்றடைந்திருப்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது' என்று கேப்ரியாசஸ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், கிராம சுகாதார பெண் ஊழியர் ஒருவர், சோப்பு போட்டு கைகளை கழுவுவது எப்படி என்பது குறித்து தெருக் குழாயில் கிராம பெண்களுக்கு விரிவான விளக்கம் அளித்தார். இந்த வீடியோவையும் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா வைரஸை தோற்கடிப்போம்" என்று அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த ராகேஷ் தாக்கர் என்பவர் தனது 2 குழந்தைகள், சோப்பு போட்டு கைகளை கழுவும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பெண் குழந்தையின் வீடியோவை கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒடிசா மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரின் வீடியோக்களையும் கேப்ரியாசஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT