Published : 22 Mar 2020 09:50 AM
Last Updated : 22 Mar 2020 09:50 AM
உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பாலிவுட் பாடகி கனிகா கபூரின் பாடல் நிகழ்ச்சி கடந்த மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது. இதில், கரோனா வைரஸ் பாதிப்புடன் பாடகி கனிகா கலந்துகொண்டது தெரிந்தது.
அவருடன் நிகழ்ச்சியில் இருந்த ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதில், தனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என அச்சம்கொண்டதால் துஷ்யந்த்தும் அவரது குடும்பத்தாரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக வசுந்தராநேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட் டிருந்தார்.
இதற்கு முன்பாகவே துஷ்யந்த், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டதுடன், எம்.பி.க்கள் கூடும் அதன் மத்திய அரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதேசமயம், ஓரிரு மாநில எம்.பி.க்களை அழைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த காலை சிற்றுண்டி விருந்திலும் பங்கேற்றார்.
இட்லி, தோசை உணவில் அதிக ஆர்வம் காட்டும் சக எம்.பி.க்களில் சிலருக்கு மக்களவையின் திமுக எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவர் கனிமொழி, விருந்து அளிப்பது வழக்கம். இந்த வகையில், கடந்த புதன்கிழமை கனிமொழியால் அளிக்கப்பட்ட விருந்தில் தேசியவாதக் காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் உள்ளிட்டோருடன் துஷ்யந்த்தும் பங்கேற்றார். இதற்கு முன்பாக நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டத்திலும் அதன் உறுப்பினரான துஷ்யந்த் கலந்து கொண்டார்.
இதுபோன்ற நேரங்களில், பாடகி கனிகா கரோனாவால் பாதிக்கப்பட்டதும், அவரது நிகழ்ச்சியில் துஷ்யந்த் கலந்து கொண்ட செய்தி வெளியாகாமல் இருந்தது. தற்போது அது வெளியானதால், துஷ்யந்துடன் நெருக்கம் காட்டிய அவரது சக எம்.பி.க்களில் பலரும் கரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT