Published : 22 Mar 2020 09:42 AM
Last Updated : 22 Mar 2020 09:42 AM
கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். இதனால் கேரள மாநிலத்தில் 3000 பேருக்கு நோய் தொற்றுக்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. காசர்கோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட ஒருவர், சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பொது இடங்களில் சுற்றியுள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து கடந்த மார்ச் 11-ம் தேதி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் வந்துள்ளார். அப்போதே அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதைப் பொருட்படுத்தாமல் பொது நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், கால்பந்து போட்டி நடந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார்.
இரண்டு எம்எல்ஏ.க்களை சந்தித்து அவர்களோடு கைகுலுக்கி ஆரத்தழுவி பேசி இருக்கிறார். அதன் பிறகு மார்ச் 14-ம் தேதி அவருக்கு காய்ச்சல் அதிகமாகி இருக்கிறது. காசர்கோடு அரசு மருத்துவமனைக்குச் சென்று மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதன் பிறகே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்.
இதற்கிடையில், கோவிட்-19 காய்ச்சலோடு குறைந்தபட்சம் 3000 பேரை அவர் சந்தித்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விதிமீறி கடை திறப்பு
வைரஸ் பரவல் ஏற்படுவதை தடுக்க காசர்கோடு மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு அனைத்து அரசு அலுவலகங்களையும் மூடும்படி மாநில அரசு உத்தரவிட்டது. கடைகள் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. எனினும், அரசின் எச்சரிக்கையை மீறி கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்த 10 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸார் ரோந்து
இதுபோன்ற தவறுகள் நிகழ்வதை தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சஜித் பாபு தெரிவித்தார்.
ஆட்சியர் சஜித் பாபு கூறுகையில், “வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும்படி சுகாதார துறையால் அறிவுறுத்தப்பட்டவர்கள் கட்டாயம் அதனை கடைபிடிக்க வேண்டும். உத்தரவை மீறினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. உத்தரவை மீறிய குற்றத்துக்கு இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நிலைமை கைமீறிப் போக அனுமதிக்க முடியாது” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT