Published : 21 Mar 2020 11:23 AM
Last Updated : 21 Mar 2020 11:23 AM
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களாலேயே கரோனா வேகமாகப் பரவுவதால் தாமதிக்காமல் உடனடியாக வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணிக்கு வெளியிட்ட நிலவரத்தின் படி இந்தியாவில் 258 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேர் வெளிநாட்டவர்.
மேற்குவங்கத்தில் இதுவரை மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதலில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய இளைஞருக்கு கரோனா உறுதியானது. இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து திரும்பிய மேலும் ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டது. தற்போது ஸ்காட்லாந்தில் இருந்து திரும்பிய 20 வயது இளம் பெண்ணுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களாலேயே கரோனா வேகமாகப் பரவுவதால் தாமதிக்காமல் உடனடியாக வெளிநாட்டு விமான சேவைக்குத் தடை விதிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானங்கள் இந்தியாவில் தரையிறங்குவதற்கு வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துணி முகக்கவசம் பயன்படுத்துவீர்..
கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள மாஸ்க் கிடைக்காவிட்டால் துணியாலாவது முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
மாஸ்க்குகளுக்கு நாடு முழுவதுமே தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் மம்தா மக்களுக்கு இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். முகக்கவசங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும் மாஸ்க்குகளுக்கும் சானிட்டைசர்களுக்கும் பெருமளவில் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த சூழலில் தான், மாஸ்குகளுக்காக காத்திருக்காமல் துணிகளைப் பயன்படுத்தியாவது நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT