

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவி வருவது உலகம் முழுவதும் இதுவரை எதிர்பார்த்திராத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. நோய்கள் பரவுவது மனிதகுலத்துக்கு புதியதல்ல. இருப்பினும், இது நம் வாழ்நாளில் இந்த அளவுக்கு எதிர்பார்த்திராத முதலாவது வைரஸ் நோயாகும். இந்த நோய்க்கு எதிராக, நோயால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தார், மருத்துவர்கள், துணை நிலை மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர்கள் ஆகியோர் தங்களது உயிரைப் பணயம் வைத்து போராடிவருகின்றனர். இதுபோன்ற பிரச்சினையில் அவர்கள் போராடி வருவதை நான் பாராட்டுகிறேன். இந்தப் பிரச்சினையை சமாளிப்போம் என நான் நம்புகிறேன்.
ஆரம்பத்தில் தொற்றுநோயைக்கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டதற் காகவும், சார்க் அமைப்பில் உள்ளநமது அண்டை நாடுகளுடன் கலந்துபேசி, அது பரவாமல் தடுப்பதற்காக கூட்டு முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும் பிரதமர் மோடியை நான் பாராட்டுகிறேன்.
இந்த கரோனா வைரஸ், மற்றவர்களிடமிருந்து விலகியிருக்குமாறு நம்மை கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த தனிமைப்படுத்துதல், சுயமாக திணிக்கப்பட்ட அல்லது மருத்துவ ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட, இதுவரையிலான நமது பயணத்தையும் எதிர்கால பாதையையும் சிந்திக்க ஒரு சிறந்த வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நோய் நமக்குப் பரவாமல்தடுக்க நாம் முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம்.
முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாமல் அந்த நோய் நம்மைத்தாக்காமல் தடுத்து விடமுடியும். மற்றவர்களிடமிருந்து விலகியிருத்தல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதே செய்தியை மகாத்மா காந்தி நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார். 1896-ம் ஆண்டு காந்தி, இந்தியாவுக்கு வந்தபோது மும்பையில் பிளேக் நோய் பரவியிருந்தது. அப்போது மகாராஷ்டிரா மாகாணத்தில் பிளேக் நோய் பரவாமல் இருக்க தான் சேவை செய்வதாக அவர் உறுதி அளித்தார். ராஜ்கோட் நகரில் அவர் ஒரு தன்னார்வ தொண்டராக பணியாற்றினார். தானே கழிப்பறைகளுக்குச் சென்றுஅதைப் பார்வையிட்டு சுத்தப்படுத்தினார். அவர் விட்டுச் சென்ற பாடங்களை நாம் இன்று பின்பற்றவேண்டும். இயற்கையை வணங்குவது நாம் கற்றுக்கொள்ள வேண்டியபின்பற்ற வேண்டிய 2-வது பாடமாகும். இந்த பூமியில் நாம் உயிர்வாழ்வதற்காக மற்ற உயிரினங்களை சார்ந்து இருக்கிறோம் என்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.
நாம் ஒவ்வொருவருடன் எவ்வாறு இணைந்திருக்கிறோம் என்பது இன்னும் ஆழமாக உணர முடிகிறது. முன்பிருந்ததை விட ஒரு வலுவான தேசமாக நமது நாடு மாறுவதற்கு தற்போதைய நெருக்கடியிலிருந்து விரைவாக வெளியேறுவதற்கான எங்கள் முடிவை மீண்டும் உறுதிப்படுத்துவதில் நான் உங்களுடன் இணைகிறேன்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கூறினார். - பிடிஐ